செய்திகள்
கைது

திருப்பூரில் ரூ.50 லட்சம் மோசடி செய்த சீட்டு நிறுவன அதிபர் கைது

Published On 2021-03-09 00:04 GMT   |   Update On 2021-03-09 00:04 GMT
போலீசார் நடத்திய விசாரணையில், சீட்டு நிறுவன அதிபர் ஏலச்சீட்டு நடத்தி அரவிந்த் மக்களிடம் பணத்தை ஏமாற்றி விட்டு தலைமறைவாகியது தெரியவந்தது.
திருப்பூர்:

திருப்பூரை அடுத்த இடுவாய் மாருதிநகரை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 47). இவர் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மங்கலம் ரோடு எஸ்.ஆர். நகரில் அரவிந்த் என்பவர் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். ரூ.1 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை சீட்டு நடத்தினார். அதில் சேர்ந்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பி பலர் ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தினார்கள். நான் முழுமையாக சீட்டுபணம் செலுத்தியும் ரூ.3 லட்சம் தொகையை கொடுக்காமல் இழுத்தடித்தார். பின்னர் ஏலச்சீட்டு நிறுவனத்துக்கு சென்றபோது பூட்டியிருந்தது. 150-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.50 லட்சம் வரை ஏமாற்றியது தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் சுந்தரவடிவேல் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் அரவிந்த் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் போலீஸ் உதவி கமிஷனர் பாலமுருகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முனியம்மாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், அப்பாகுட்டி, தலைமை ஏட்டுகள் கவுரிநாதன், வினோ ஆனந்தன் மற்றும் ஆயுதப்படை போலீஸ்காரர் கருணாசாகர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில், ஏலச்சீட்டு நடத்தி அரவிந்த் மக்களிடம் பணத்தை ஏமாற்றி விட்டு தலைமறைவாகியது தெரியவந்தது. மேலும் கோவையிலும் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தது தொடர்பாக கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். சேலத்தில் புதிதாக நிதி நிறுவனத்தை அரவிந்த் தொடங்கியுள்ளதையும் போலீசார் கண்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து திருப்பூர் மங்கலம் ரோடு பகுதியில் வைத்து அரவிந்த்தை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அரவிந்த் (29) கோவை வடவள்ளியை சேர்ந்தவர் ஆவார். சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.

முறையாக பதிவு செய்யப்படாத சீட்டு நிறுவனங்களில் பொதுமக்கள் யாரும் சீட்டுக்கு பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். இதுபோன்று போலி நிறுவனம் மூலம் சீட்டு நடத்தி பொதுமக்களை ஏமாற்றும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் கூறினார்.
Tags:    

Similar News