செய்திகள்
ஸ்ரீபிரியா

பெண்கள் எடுக்கவேண்டிய உறுதிமொழி இதுதான்... ஸ்ரீபிரியாவின் மகளிர் தின வீடியோ

Published On 2021-03-08 15:01 GMT   |   Update On 2021-03-08 15:01 GMT
வரும் தேர்தலில் பெண்கள் 100 சதவீதம் வாக்களித்து மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என மக்கள் நீதி மய்யம் செயலாளர் ஸ்ரீபிரியா கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை:

மகளிர் தினத்தையொட்டி நடிகையும் மக்கள் நீதி மய்யம் செயலாளருமான ஸ்ரீபிரியா சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் பேசியதாவது:-

2016 தேர்தலில் 74 சதவீதம் பெண்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் 75 சதவீதம் ஆண்கள் வாக்களித்துள்ளனர்.  நம் நாட்டில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம். அப்படி இருக்கும்போது வாக்களிப்பதில் ஏன் பின்தங்கவேண்டும்? வரும் தேர்தலில் 100 சதவீதம் வாக்களித்து மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.

2021 சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள், சவாலை தேர்வு செய்வது. நாம் சவால்களை சந்தித்தால்தான் மாற்றத்தை கொண்டு வர முடியும். பெண்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். அத்துடன் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை குடும்பத்தினருக்க சொல்ல வேண்டும். ஒரு தாயால்தான், சகோதரியால் தான், மகளால்தான் நல்ல விசயத்தை சொல்ல முடியும்.

எவ்வளவு நாள்தான் நம்மை ஏமாற்றுவோருக்கு வாக்களிப்போம். டார்ச் அடித்து பாருங்கள், நல்லது எங்கு இருக்கும் என்று தெரியும். மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களிக்கவேண்டும். நேர்மை என்ற மூன்றெழுத்துக்கு சொந்தக்காரர் கமல். கமலுக்கு வாக்களிப்போம் நாட்டுக்கு நல்ல வெளிச்சத்தை கொண்டு வருவோம்.

குறிப்பாக, மகளிர் தினத்தில் பெண்கள் அனைவரும், ‘எங்களுடைய வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்ற உறுதிமொழி எடுக்கவேண்டும். இதை வீட்டு வாசலில் எழுதியும் ஒட்டலாம். 

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த வீடியோவை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தனது சமூக வலைத்தள பங்கங்களில் பகிர்ந்துள்ளார். பொதுத்தேர்வுகளில் பெண்கள் முதலிடம் பிடிப்பது போல பொதுத் தேர்தல்களிலும் முதலிடம் பிடிக்க வேண்டும், சமவாய்ப்பு, சமநீதி என மாதர் நலம் போற்றும் மநீமவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என கமல் கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags:    

Similar News