செய்திகள்
புதுமார்க்கெட் வீதியில் சமூக இடைவெளி இல்லாமலும், முககவசம் அணியாமலும் சென்றவர்களை படத்தில் காணலாம்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு - முககவசம் கட்டாயம்

Published On 2021-03-07 22:47 GMT   |   Update On 2021-03-07 22:47 GMT
கொரோனா தொற்று குறைய, குறைய ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு அதிகமாகி உள்ளது.
திருப்பூர்:

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியது. இதனால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டனர். இதுபோல் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தன.

இதன் காரணமாக கொரோனா பாதிப்பும் குறைந்தது. இருப்பினும் கொரோனா தொற்று முழுமையாக தீரவில்லை. கொரோனா தொற்று குறைய, குறைய ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை 500-க்கும் அதிகமாக இருந்து வருகிறது. இதில் பெரும்பாலான மாவட்டங்களில் தற்போது கொரோனா தொற்று இல்லை. ஆனால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில்நகரங்கள் உள்ள மாவட்டங்களில் நாள் ஒன்றின் பாதிப்பு கடந்த சில நாட்களாக 10-க்குள் இருந்து வந்தது.

தற்போது இந்த பாதிப்பு எண்ணிக்கை 20-ஐயும் தாண்டி வருகிறது. மீண்டும் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கு காரணம் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காதது மற்றும் முககவசம் அணிவதில்லை. திருப்பூர் புதுமார்க்கெட் வீதி, சந்தை பகுதிகள் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளிைய கடைபிடிக்காமலும், முககவசம் அணியாமலும் நடமாடுவதை காண முடிகிறது. இதுபோல் கொரோனா பரிசோதனை செய்ய பொதுமக்கள் முன்வரவும் இல்லை. இதன் காரணமாகவே தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். வேலை தேடி தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் வருகிறார்கள். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் காரணமாக இயல்பு நிலையே இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் சாதாரணமாக வந்து செல்கிறார்கள். இதுபோல் பொதுமக்களும் முககவசம் அணிவதில்லை. சமூக இடைவெளியையும் கடைபிடிப்பது இல்லை.

இதன் காரணமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போது பாதிப்பு அதிகரித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை கொரோனா பணிகளில் தற்போது கவனம் செலுத்தவில்லை. பாதிப்பு குறைவாக இருப்பதற்கு காரணம் குறைவான அளவிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும். முககவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News