செய்திகள்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் புகுந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு- இன்னமும் புரியாத புதிர்தான்‘கொரோனா’

Published On 2021-03-07 03:04 GMT   |   Update On 2021-03-07 03:04 GMT
ஜனநெருக்கடி மிகுந்த நமது நாட்டில், கொரோனோ பாதிப்புகள் பெரிய அளவில் ஏற்படாததற்கு காரணம் பாரம்பரிய வைத்திய முறை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட காரசாரமான உணவு முறைகள் என பல்வேறு அம்சங்கள் இருந்தன.
புத்தாண்டை கொண்டாட உலகமே தயாராகிக்கொண்டிருந்த வேளை அது. 2004-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கடல் கொந்தளிப்புடன் எழுந்து வந்த ஆழிப்பேரலை தமிழகத்தின் கடலோர பகுதியை துவம்சம் செய்தது. ஏராளமான உயிர்களை சுருட்டிச் சென்றது. நாடே சோகத்தில் மூழ்கியது. நம்மைப்போன்று வேறு சில நாடுகளும் பேரழிவை சந்தித்தன.

கிழக்காசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் மட்டும் அடிக்கடி ஏற்படும் இந்த ஆழிப்பேரலையை சுனாமி என்று அழைத்தார்கள். ஒரே நாளில் அதன் கோரத்தாண்டவம் எப்படி இருக்கும் என்பதை இந்தியாவும் அன்றுதான் கண்டுகொண்டது. அதன்பின்புதான் சுனாமி என்பதன் அர்த்தம் புரிய தொடங்கியது. இன்றும் அந்த வார்த்தை கடலோர பகுதி மக்களை கதிகலங்க வைக்கிறது.

சுனாமி- ஒரே நாளில் உயிர், உடைமைகளை களவாடிச் சென்றது.

இப்போது கொரோனாவோ ஓராண்டாக மனித உயிர்களை மட்டும் களவாடிக் கொண்டு இருக்கிறது. ஆனால், இன்னும் மனித சமுதாயத்திடம் இருந்து அது விடைபெறவில்லை.

சுனாமியைப் போல் ஒரு சில நாடுகளை மட்டும் கொரோனா பாதிக்கவில்லை. அதற்கு வளர்ச்சி அடைந்த நாடுகள், ஏழை நாடுகள் என்ற பாகுபாடு இல்லை.

சீனாவில் தொடங்கி, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், இத்தாலி என்று பரவி, இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும், ஏழை நாடுகளிலும் புகுந்து பட்டிதொட்டி எங்கும் கொரோனா தன் கொடியை பறக்கவிட்டது.

சீனாவில் வுகான் நகரில் இருந்து பரப்பி விடப்பட்டதாக கூறப்படும் இந்த வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெளிக்கிளம்பியதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சீனா சென்று வந்த ஐரோப்பியர்கள் மூலமாக உலகம் முழுவதும் பரவியது. அதனால் தான் இந்த வைரசுக்கே கோவிட்-19 (கொரோனா வைரல் டிசீஸ்-2019) என பெயரிட்டனர்..

இப்படியாக வெளிநாடுகளில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று நமது நாட்டுக்குள், அதுவும் தமிழகத்துக்குள் நுழைந்து இன்றுடன் ஒரு ஆண்டு ஆகிவிட்டது. பின்னர் படிப்படியாக பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கின.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நமது நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், இந்த கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொள்ள சொல்லியதன் விளைவு, மிக மோசமான பாதிப்புகளை நமது நாட்டில் ஏற்படுத்தி விட்டது.

குழந்தைகளை தவிர, அனைத்து தரப்பினருக்கும் கொரோனா வைரசால் பாதிப்பு ஏற்பட்டது. நுரையீரல் பாதிப்பு, நாள்பட்ட சர்க்கரை நோய், இருதய நோய் உள்ள 50-வயதுக்கு மேற்பட்ட ஏராளமானோரின் உயிரை காவு வாங்கவும் இந்த வைரஸ் தயங்கவில்லை.

காற்றின் மூலமாக வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால், இருமல், தும்மல் மூலமும் பரவியது. எனவே அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. சமூக பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இன்னமும் முழுமையாக ஊரடங்கு விலக்கப்படவில்லை.


வைரஸ் பரவலுக்கான சங்கிலி தொடர்பை அறுப்பதற்காகவே ஊரடங்கு முயற்சி. இது ஓரளவுக்கு வெற்றியையும் தந்துள்ளது. ஜனநெருக்கடி மிகுந்த நமது நாட்டில், கொரோனோ பாதிப்புகள் பெரிய அளவில் ஏற்படாததற்கு காரணம் பாரம்பரிய வைத்திய முறை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட காரசாரமான உணவு முறைகள் என பல்வேறு அம்சங்கள் இருந்தன. இது தவிர, ஆயுர்வேத, ஓமியோபதி இந்திய மருத்துவ முறைகளும் ஓரளவு கைகொடுத்தன. தமிழகத்தில் கபசுர குடிநீர் முக்கிய பங்கு வகித்ததாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

புனித யாத்திரை, பண்டிகைகள் வீட்டளவில் சுருங்கின. மனைவி ஓரிடத்தில், கணவன் வேறு இடத்தில் என்று ஒருவரையொருவர் சந்திக்க முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகள். அருகிலுள்ள ஊருக்கு செல்லக்கூட தடைகள்.

வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே தங்களது சொந்த மாநிலம் திரும்பிய சோகம். செல்லும் வழியில் பலர் உயிரிழந்த வேதனை. அவர்களுக்காக பஸ், ரெயில் விடப்படுகிறது என தெரிந்தவுடன், ரெயில் நிலையங்களிலும், பஸ் நிலையங்களிலும் படையெடுத்த புலம்பெயர் தொழிலாளர்கள்.

தமிழகத்தில் இருந்து இயக்கிய ஷர்மிக் சிறப்பு ரெயில்களில் சமூக பரவலுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த காலத்திலும், ஒரு ரெயிலுக்கு 2 ஆயிரம் பேர் வரை அனுப்பி வைக்கப்பட்டனர். தொழில்கள் முடங்கின. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. வேலைவாய்ப்பு பறிபோனது.

வைரசின் தாக்கமும் சும்மா இல்லை. பட்டிக்காடு முதல் பட்டணம் வரையிலும், படித்தவர் முதல் படிக்காதவர் வரையிலும், ஏழை முதல் பணக்காரன் வரையிலும், முகவரியே தெரியாதவர்கள் முதல் முக்கிய பிரமுகர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் இந்த வைரஸ் தாக்குதலால் உடல்நலம் பாதித்து மரணம் அடைந்தார். தமிழகத்தில் அமைச்சர் துரைக்கண்ணு, எச்.வசந்தகுமார் எம்.பி., தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உயிரையும் கொரோனா கொண்டு சென்றுவிட்டது.

இதே போல் நாடு முழுவதும் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் கொரோனாவுக்கு பாதி்க்கப்பட்டனர். அதில் இருந்து மீள முடியாமல் சிலர் மரணத்தையும் தழுவினார்கள்.

தமிழகத்தில் ஓராண்டாகியும் கொரோனா ஏற்படுத்திய அச்சம் இன்னும் விலகவில்லை. உருமாறிய கொரோனாவும் சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் புகுந்து மிரட்டப்பார்த்தது. தற்போது கொரோனாவின் 2-வது பாதிப்பு என கூறப்படும், 2-வது அலை வீசத்தொடங்கி, பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இன்னமும் மக்கள் உஷாராகத்தான் இருக்க வேண்டும்.

இதில் வியப்பென்னவென்றால், மிருகங்களை தாக்கும் கொரோனா வைரஸ், மனிதர்களை இந்தளவுக்கு தாக்கியது எப்படி என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.
Tags:    

Similar News