செய்திகள்
பாராகிளைடரில் பறந்தபடி கலெக்டர் அரவிந்த் தேர்தல் விழிப்புணர்வு சாகச நிகழ்ச்சி நடத்திய போது எடுத்த படம்.

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பாராகிளைடரில் பறந்த கலெக்டர்

Published On 2021-03-06 20:58 GMT   |   Update On 2021-03-06 20:58 GMT
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்
கன்னியாகுமரி:

தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இதைத்தொடர்ந்து தேர்தலுக்கான ஏற்பாடுகளிலும், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டியதின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியிலும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன் ஒரு கட்டமாக குமரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரையில் “பாராகிளைடர்” மூலம் வானில் பறந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சாகச நிகழ்ச்சியை நடத்த குமரி மாவட்ட நிர்வாகம் கோவையில் உள்ள இந்திய வான் விளையாட்டு மற்றும் அறிவியல் மையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

அதன்படி இந்த தேர்தல் விழிப்புணர்வு சாகச நிகழ்ச்சி கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அரவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாராகிளைடரில் வானில் பறந்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதில் நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்த மதுநிதா என்ற பள்ளி மாணவி முதன் முதலில் “பாராகிளைடர்” மூலம் 10 நிமிட நேரம் வானில் பறந்து தேர்தல் விழிப்புணர்வு சாகச நிகழ்ச்சியை நடத்தினார். இந்த பாராகிளைடரில் ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்க வேண்டியதின் அவசியம், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டியதின் அவசியம் மற்றும் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வலியுறுத்தும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இறுதியாக குமரி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அரவிந்த் பாராகிளைடரில் வானில் பறந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியின் போது 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.
Tags:    

Similar News