செய்திகள்
தேர்தல் முடியும் வரை புதிய ரேஷன் கார்டு கிடைக்காது என சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

சட்டமன்ற தேர்தல் முடியும் வரை புதிய ரேஷன் கார்டு கிடைக்காது - மாவட்ட வழங்கல் அதிகாரி தகவல்

Published On 2021-03-06 19:40 GMT   |   Update On 2021-03-06 19:40 GMT
தமிழக சட்டமன்ற தேர்தலின் காரணமாக ஏராளமான சேவைகளுக்கும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்படுகிறது.
திருப்பூர்:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் தேர்தலின் காரணமாக ஏராளமான சேவைகளுக்கும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்படுகிறது.

அந்த வகையில் தற்போது ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்றால், பறக்கும் படை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்வார்கள். இதுபோன்ற பல விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளது. இதற்கிடையே தேர்தல் முடியும் வரை புதிய ரேஷன் கார்டுகளும் கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க ஆர்வமாக விண்ணப்பித்த பலருக்கும் தேர்தல் முடியும் வரை ரேஷன் கார்டு கிடைக்காது என தெரிவிக்கப்பட்டதால் பலரும் கவலையடைந்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி கணேசன் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டம் தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டம் என்பதால், வேலை தேடி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் திருப்பூருக்கு வருகிறார்கள். இங்கு குடும்பத்துடன் தங்கி வேலை செய்கிறார்கள். இதன் காரணமாக தங்களது சொந்த ஊர்களில் உள்ள ரேஷன் கார்டுகளை திருப்பூருக்கு மாற்றி வருகிறார்கள். இதுபோல் புதியதாக திருமணம் முடித்தவர்களும் புதியதாக ரேஷன் கார்டுகள் கேட்டு தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பித்து வருகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட நாட்களுக்குள் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் காரணமாக, தற்போது ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதற்கிடையே தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், புதிய ரேஷன் கார்டுகள் வினியோகம் கிடையாது. தேர்தல் முடியும் வரை ரேஷன் கார்டுகள் கிடைக்காது. தேர்தல் முடிவடைந்த பின்னர் பொதுமக்கள் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இதுபோல் இறந்தவர்கள் பெயரை நீக்க விரும்புகிறவர்கள் மட்டும் நீக்கிக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News