2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இருந்து புதிதாக உதயமான மண்ணச்சநல்லூர் தொகுதி கண்ணோட்டம் ...
மண்ணச்சநல்லூர் தொகுதி கண்ணோட்டம்
பதிவு: மார்ச் 05, 2021 19:01
மண்ணச்சநல்லூர் தொகுதி
தமிழகத்தின் புகழ்பெற்ற அம்மன் திருத்தலங்களில் முக்கியமானதாகவும், முதன்மையானதாகவும் போற்றப்படும் சமயபுரம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ள தொகுதிதான் மண்ணச்சநல்லூர். இத்தொகுதி திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடக்கு கரையையொட்டி அமைந்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட் தொகுதி மறுசீரமைப்பில் முசிறி தொகுதியிலிருந்து சில பகுதிகளை பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட சட்டப்பேரவை தொகுதியாகும்.
இந்த தொகுதியில் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் அனைத்து கிராம ஊராட்சிகள், முசிறி ஊராட்சி ஒன்றியத்தின் பெரும் பாலான பகுதிகள். மண்ணச்சநல்லூர் மற்றும் எஸ். கண்ணனூர் பேரூராட்சிகள் இந்த தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
தொகுதி மக்களின் கோரிக்கைகள்
இந்த தொகுதிகுட்பட்ட திருப்பைஞ்சீலி பகுதியில் செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழில், குடிசைத் தொழிலாக ஒரு காலத்தில் மிக பெரிய அளவில் நடைபெற்றது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த தொழில் நலிவடைந்து வருகிறது. இதை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற் கொள்ளவில்லை என்பது இப்பகுதி மக்களின் குற்றச் சாட்டாக உள்ளது.
தமிழகத்தில் உள்ள அதிகம் வருமானம் வரும் கோவில்களில் இரண்டாவது இடத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் இந்த தொகுதியில் அமைந்திருப்பது சிறப்பு. அதே நேரத்தில் இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். மண்ணச்ச நல்லூரில் காவல் உட்கோட்ட அலுவலகம், தீய ணைப்பு நிலையம், தொகுதியின் தலைநகராக உள்ள மண்ணச்சநல்லூரில் பேருந்து நிலையம், திருப்பைஞ்சீலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை சீர் செய்ய வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைகள் நிலு வையிலேயே உள்ளது.
ஸ்ரீரங்கம்-நொச்சியம் இடையே கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்று இத்தொகுதியின் உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் டி.பி. பூனாட்சி சட்டசபையில் பேசியும் இதுநாள்வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
வேங்கை மண்டலம், மூவானூர், பெரமங்கலம், காட்டுக்குளம், கோமங்கலம், நெய்வேலி. திண்ணக்கோணம், அய்யம்பாளையம், ஏவூர், கொடுந்துறை, சித்தாம்பூர், ஆமூர், குணசீலம், திருத்தலையூர், துறையூர், புதுப்பட்டி, கரட்டாம்பட்டி, திண்ணனூர், சுக்காம்பட்டி, புலிவலம், திருத்திமலை மங்களம், திலையாநத்தம், ஜெயங்கொண்டம், பேரூர், வாளவந்தி கிழக்கு ஆகிய கிராமங்கள் இத்தொகுதிக்குள் அடங்கும்.
இத்தொகுதியில் மொத்தம் 2,43,272 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,17,640 பேரும், பெண்கள் 1,25,601 பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 31 பேரும் உள்ளனர்.
மண்ணச்சநல்லூரில் 18 வார்டுகளும், சா.கண்ணனூரில் 15 வார்டு களும் உள்ளன. கிராம ஊராட்சிகள் 63 உள்ளன.
Related Tags :