செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

லாரி மோதி பள்ளி மாணவி படுகாயம்: பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2021-03-04 15:44 GMT   |   Update On 2021-03-04 15:44 GMT
திருச்சி ஜீயபுரம் அருகே லாரி- சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளி மாணவி பலத்த காயம் அடைந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஜீயபுரம்:

திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள பெரியகருப்பூரை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர். இவருடைய மகள் பிரதீபா (வயது 10). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து சைக்கிளில் கடைக்குச்சென்ற பிரதீபா, அங்கு பொருட்களை வாங்கிக்கொண்டு, வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

பெரியகருப்பூர் வளைவு அருகே மாணவி வந்த போது, சேலத்திலிருந்து சோமரசம்பேட்டைக்கு செங்கல் ஏற்றிச்சென்ற லாரி, சைக்கிள் மீது மோதியது. இதில் மாணவிக்கு தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், ஆத்திரமடைந்த பொதுமக்கள், அப்பகுதியில் வேகத்தடை அமைக்கக்கோரி பெரியகருப்பூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து விரைவில் வேகத்தடை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த சாலையில் சுமார் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News