செய்திகள்
மத்திய மந்திரி அமித்ஷா

மத்திய மந்திரி அமித்ஷா 7-ந்தேதி நாகர்கோவில் வருகை

Published On 2021-03-04 09:42 GMT   |   Update On 2021-03-04 09:42 GMT
மத்திய மந்திரி அமித்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். தமிழகத்திற்கு 2-ம் கட்டமாக வருகிற7-ந்தேதி வரும் அவர், குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் மட்டுமின்றி, கன்னியாகுமரி பாராளு மன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதனால் மற்ற மாவட்டங்களை காட்டிலும் குமரி மாவட்டத்தில் நடக்கும் தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

குமரி மாவட்டத்தில் கட்சி தலைவர்களின் வருகையால் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 1-ந்தேதி குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். அதற்கு முன்னதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரதான கட்சிகளிடையே கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும், மேலும் பல தலைவர்கள் குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வருகை தர உள்ளனர்.

மத்திய மந்திரி அமித்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். தமிழகத்திற்கு 2-ம் கட்டமாக வருகிற7-ந்தேதி வரும் அவர், குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதற்காக அவர் அன்றையதினம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாகர் கோவில் வருகிறார். நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் வந்திறங்கும் அவருக்கு பாரதீய ஜனதா கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்பு அமித்ஷா அங்கிருந்து காரில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமிதரிசனம் செய்யும் அவர், பின்னர் பீச் ரோட்டில் இருந்து வேப்பமூடு சந்திப்பு வரை ரோடு ஷோ சென்று பிரசாரம் செய்கிறார்.

அதனைத்தொடர்ந்து வடசேரியில் உள்ள ஒரு ஓட்டலுக்குசெல்லும் மத்திய மந்திரி அமித்ஷா, அங்கு நடைபெறும் பாரதீய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அப்போது அவர், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசுகிறார்.

மத்திய மந்திரி அமித்ஷா வருகையை முன்னிட்டு நாகர்கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. அமித்ஷா சென்று வரக் கூடிய இடங்கள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் ஓட்டல், செல்லக்கூடிய சாலைகள், பிரசாரம் செய்யும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

Tags:    

Similar News