செய்திகள்
பாளை முருகன்குறிச்சியில் உள்ள தெருவில் கருப்புகொடி கட்டப்பட்டுள்ளது.

வன்னியர் உள்ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு- பாளையில் 3 தெருக்களில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்

Published On 2021-03-04 09:36 GMT   |   Update On 2021-03-04 09:36 GMT
பாளை முருகன்குறிச்சியில் 3 தெருக்களில் வன்னியர் உள்ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.
நெல்லை:

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கி வந்த இடஒதுக்கீட்டில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடாக வன்னியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள தேவர் உள்ளிட்ட முக்குலத்தோருக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி அவர்கள் பல்வேறு இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே நாங்குநேரி, வல்லநாடு, சீவலப்பேரி உள்ளிட்ட இடங்களில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பாளை முருகன்குறிச்சியில் 3 தெருக்களில் இன்று கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறும்போது, குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கும் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி நாங்கள் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.

இதையறிந்த பாளை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. எனினும் அதிகாரிகள் அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.



Tags:    

Similar News