செய்திகள்
லாரிகள்

லாரிகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

Published On 2021-03-04 02:02 GMT   |   Update On 2021-03-04 02:02 GMT
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் வருகிற 15-ந் தேதி முதல் நடைபெற இருந்த லாரிகள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தனராஜ் தெரிவித்துள்ளார்.
சேலம்:

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளரும், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளருமான தனராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமீபகாலமாக டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து துறைகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி லாரி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தும் மத்திய, மாநில அரசுகளின் வரி விதிப்பால் கூடுதல் விலைக்கு டீசல் விற்கப்படுகிறது. எனவே, டீசல் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும்.

சுங்கச்சாவடிகளில் கடந்த மாதம் 15-ந் தேதி முதல் பாஸ்டேக் முறை அமலில் உள்ளது. இதில், பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் சுங்கச்சாவடிகளில் பல மணி நேரம் லாரிகள் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது. எனவே, சுங்கச்சாவடிகளில் ஒரு பாதையில் மட்டும் கட்டணம் செலுத்தும் முறையை ஏற்படுத்த வேண்டும்.

கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15-ந் தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் லாரிகள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. அதற்கு பதில், மே 2-ந் தேதிக்கு பிறகு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

வருகிற 9-ந் தேதி பெங்களூருவில் தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்க இருக்கிறோம்.

இவ்வாறு தனராஜ் கூறினார்.
Tags:    

Similar News