செய்திகள்
சசிகலா

அரசியலை விட்டு ஒதுங்கினார் சசிகலா... தி.மு.க.வை வீழ்த்த தொண்டர்களுக்கு வேண்டுகோள்

Published On 2021-03-03 16:49 GMT   |   Update On 2021-03-03 16:57 GMT
பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ என்றும் ஆசைப்பட்டதில்லை என்று சசிகலா கூறி உள்ளார்.
சென்னை:

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை முடிந்து திரும்பிய சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அமமுகவினர் உற்சாகத்தில் இருந்தனர். அதிமுகவை மீட்டெடுப்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கூறியிருந்தார். 

அதேசமயம் சசிகலாவை அதிமுகவில் சேர்த்து, கட்சியை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையம் அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என கட்சி தலைமை திட்டவட்டமாக கூறிவிட்டது. எனவே, சசிகலாவின் அரசியல் நகர்வு, வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும், அது திமுகவுக்கு சாதகமாகலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா கூறி உள்ளார். பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ என்றும் ஆசைப்பட்டதில்லை என்றும், அரசியலைவிட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வதாகவும் சசிகலா கூறி உள்ளார். 

மேலும் திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து, விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட, அம்மாவின் தொண்டர்கள் படுபடவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சசிகலாவின் இந்த திடீர் முடிவால் தமிழக அரசியல் களம் மட்டுமின்றி தேர்தல் களத்திலும் மாற்றங்கள் ஏற்படும். எது எப்படியாக இருந்தாலும், சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கியது, அதிமுகவுக்கு கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News