செய்திகள்
செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு : பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

Published On 2021-03-02 22:34 GMT   |   Update On 2021-03-02 22:34 GMT
குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுப்பர்பாளையம்:

திருப்பூர் மாநகராட்சி 1-வது வார்டுக்குட்பட்ட தண்ணீர்பந்தல் காலனியை அடுத்த வீரப்பசெட்டியார்நகர் பகுதியில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தின் மேல்மாடியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால் பொதுமக்களின் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும், இதனால் அங்கு அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் சார்பில் ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுக்கப்பட்டது.

ஆனால் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று பணி நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், குழந்தைகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ் தலைமையில் நேற்றுகாலை நாகராஜ் வீட்டை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து இந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

வீரப்ப செட்டியார்நகரில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மேல்மாடியில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் அருகில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் தனியார் பள்ளி இருப்பதால் மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே வீரப்ப செட்டியார் நகரில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரத்தை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
Tags:    

Similar News