செய்திகள்
இடிந்து விழும் நிலையில் உள்ள திருத்துறைப்பூண்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

திருத்துறைப்பூண்டியில் பாழடைந்து கிடக்கும் அரசு பள்ளி கட்டிடம்- பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?

Published On 2021-03-02 14:39 GMT   |   Update On 2021-03-02 14:39 GMT
திருத்துறைப்பூண்டியில் பாழடைந்து கிடக்கும் அரசு பள்ளி கட்டிடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவில் ஒரு அரசு மருத்துவமனை கட்டிடம் இயங்கி வந்தது. இந்த கட்டிடம் திருத்துறைப்பூண்டி வேதை சாலைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து மருத்துவமனை இயங்கி வந்த கட்டிடத்தில் திருத்துறைப்பூண்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. பின்னர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு திருத்துறைப்பூண்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த நிலையில் பழைய பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடம் பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் இந்த கட்டிடத்தின் உள்ளே அடர்ந்த காடுகள் போல செடி, மரங்கள் வளர்ந்து பாழடைந்து காணப்படுகிறது.

மேலும் பள்ளியின் சுற்றுச்சுவர் சாய்ந்தும், விரிசல் ஏற்பட்டும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக சாலையில் செல்பவர்கள் மீது இந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருத்துறைப்பூண்டியில் பாழடைந்து பூட்டியே கிடக்கும் பழைய பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயிர்சேதம் ஏற்படும் முன்பு இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளியின் சுற்றுச்சுவரை இடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
Tags:    

Similar News