செய்திகள்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் கிரண்குராலா தலைமையில் நடைபெற்ற காட்சி.

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்- கலெக்டர் கிரண்குராலா தகவல்

Published On 2021-03-02 13:21 GMT   |   Update On 2021-03-02 13:21 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் கிரண்குராலா தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:

சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள், நிலையான கண்காணிப்புக்குழு, பறக்கும்படை, வீடியோ கண்காணிப்பு குழு ஆகிய குழுக்களுக்கான ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிரண்குராலா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் கிரண்குராலா பேசும்போது, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி கட்சி கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துதல், பொது மற்றும் தனியார் இடங்களில் விளம்பரம் செய்தல், வேட்பாளர்கள் பிரச்சாரம், வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் பணியின்போது வாகனங்களை பயன்படுத்துதல் குறித்து அறிவுரை வழங்கினார்.

மேலும் அனுமதியின்றி பொது இடங்கள், பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள், பாலங்கள், சுவர்களில் எழுதப்பட்டுள்ள விளம்பரங்கள் மற்றும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பதாகைகளை உடனே அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் நேர்மையாக தேர்தல் பணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை ஒன்றிணைந்து சிறப்பாக செயல்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பறக்கும் படை, நிலையான கண்காணிப்புகுழு மற்றும் வீடியா கண்காணிப்புகுழு, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து நிலை அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் மாவட்ட கலெக்டர் கிரண்குராலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 9 பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ கண்காணிப்புகுழு அமைத்து அவர்கள் 24 மணி நேரமும் கண் காணித்து வருகின்றனர்.

மேலும் இந்த குழுக்கள் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படும் பொதுப்பார்வையாளர் மற்றும் செலவின மேற்பார்வையாளர் மூலம் வரப்பெறும் புகார் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிப்பார்கள்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் (04151- 224155,224156,224157,224158 ஆகிய தொலைபேசி எண்களை உள்ளடக்கிய 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக சான்றிதழ் வழங்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த சந்தேகங்கள் மற்றும் விதிமீறல் தொடர்பான புகார்களுக்கு மேற்குறிப்பிட்டுள் தொலைபேசி எண்கள் மற்றும் 1950 என்ற கட்டமில்லா தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News