செய்திகள்
ராஜாமணி

மண்ணச்சநல்லூர் அருகே கோவில் திருவிழாக்களில் தங்க சங்கிலி பறித்த பெண் சிக்கினார்

Published On 2021-03-02 12:11 GMT   |   Update On 2021-03-02 12:11 GMT
திருப்பைஞ்சீலி உள்பட பல ஊர்களில் நடந்த கோவில் திருவிழாக்களில் சங்கிலி பறித்த பெண் சிக்கினார். அவரிடம் இருந்து 25 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
சமயபுரம்:

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி தெற்கு தெருவில் கடந்த பிப்ரவரி மாதம் 4-ந் தேதி நடந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அதே பகுதியை சேர்ந்த விமலா (வயது 59), ராணி (50), பிச்சையம்மாள், ஆரியமாலா, சரஸ்வதி ஆகிய 5 பெண்களிடம் சுமார் 20 பவுன் நகை மற்றும் தங்க சங்கிலிகளை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புலிவலம் அருகே உள்ள பெரமங்கலத்தில் நடந்த கோவில் கும்பாபிஷேக விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற சிலரை பிடித்து விசாரணை செய்தார்.

அவர்களில், தஞ்சாவூர் கோரிகுளம் பூக்காரதெருவைச் சேர்ந்த ராஜாமணி(68) என்ற பெண்ணிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை செய்தனர். அப்போது அவர் திருப்பைஞ்சீலியில் நடந்த கோவில் கும்பாபிஷேக விழாவில் மேற்கண்ட 5 பெண்களிடம் நகை பறித்ததும், மேலும் கொள்ளிடம் நெம்பர்-1 டோல்கேட் அருகே உள்ள பிச்சாண்டார்கோவில் மேனகா நகரைச் சேர்ந்த புஷ்பம் (62) என்பவரிடம் 5 பவுன் நகையை பறித்தவர் என்பதும் தெரிய வந்தது.

மேலும், இவர் பலஊர்களில் நடக்கும் கும்பாபிஷேகம் மற்றும் கோவில் திருவிழாக்களில் பக்தர்கள் சிலரிடம் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும், அவர் மீது தஞ்சாவூர் கீழக்கரை, நாமக்கல் மாவட்டம் மோகனூர், கும்பகோணம், மதுரை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

அதன்பேரில், அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 25 பவுன் நகைகளை மீட்டனர். கோவில் திருவிழாக்களில் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை, துரிதமாக செயல்பட்டு மீட்ட மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசாரை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
Tags:    

Similar News