செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கோவை மாவட்டத்தில் முதல் நாளில் 774 பேர் கொரோனா தடுப்பூசி போட்டனர்

Published On 2021-03-02 10:11 GMT   |   Update On 2021-03-02 10:11 GMT
கோவை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பிரிவில் முதல் நாளில் 774 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை:

நாடு முழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நேற்று தொடங்கியது. இதில் முதல்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களில் இணை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் 26 அரசு ஆஸ்பத்திரிகளிலும், 79 தனியார் ஆஸ்பத்திரிகளிலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் கோவிஷீல்டு, கோ வேக்ஸின் ஆகிய 2 தடுப்பூசிகளும் செலுத்தப்படுகிறது.

மற்ற அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப தடுப்பூசிகள் தேர்வு செய்து செலுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மட்டும் பொதுமக்கள் பிரிவில் 157 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதில் 41 பேருக்கு கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கிய முதல் நாளிலேயே முதியோர்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பிரிவில் முதல் நாளில் 774 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி கமி‌ஷனரும் தனி அலுவலருமான குமாரவேல் பாண்டியன் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகராட்சியின் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகளினாலும், மாநகர மக்களின் ஒத்துழைப்பினாலும் தற்போது கொரோனாவின் பாதிப்பு குறைந்த நிலையில் உள்ளது.

கொரோனா பரவுதலை தடுக்க கொரோனா நோய் தடுப்பூசியை பொதுமக்கள் அனைவரும் போட்டுக்கொள்வது அவசியமானதாகும். மேலும், தற்போது கொரோனா தாக்கம் குறிப்பிட்ட சில மாநிலங்களில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கும் மேற்பட்டவர்கள் இத்தடுப்பூசியை போட்டுக்கொள்வது மிகவும் அவசியமானதாகும். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இத்தடுப்பூசியானது இலவசமாக பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இதில் தனிகவனம் செலுத்தி, கொரோனா நோய் தொற்றில் இருந்து தங்களையும், தங்கள் சமூகத்தையும் பாதுகாக்கும் வண்ணம் தடுப்பூசி போட்டுக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எனவே பொதுமக்கள் கோவிட்-19 தடுப்பூசியை தவறாமல் போட்டுக்கொள்ளவும், எங்கு சென்றாலும் தவறாமல் முகக்கவசம் அணியவும், அடிக்கடி சோப்பினால் கைகளைக் கழுவவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் மேற்கண்ட தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து கொரோனா இல்லாத கோவை மாநகராட்சியாக உருவாக்கிட ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News