செய்திகள்
கமல்ஹாசன்

விருப்பமனு அளித்தவர்களிடம் கமல்ஹாசன் நேர்காணல்

Published On 2021-03-01 06:41 GMT   |   Update On 2021-03-01 06:41 GMT
மக்கள் நீதி மய்யம் கட்சியில் நிர்வாக மற்றும் செயற்குழுவில் உள்ள உறுப்பினர்கள் பலர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர்.

சென்னை:

தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. அணிகளுக்கு மாற்றாக களம் இறங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் 3-வது அணியை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

கடந்த 2 நாட்களாக மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் முன்னணி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலில் ஈடுபட்டார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் நிர்வாக மற்றும் செயற்குழுவில் உள்ள உறுப்பினர்கள் பலர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர்.

இன்று 25 பேரிடம் நேர்காணல் செய்ய கமல்ஹாசன் திட்டமிட்டார். இதன்படி இன்று காலை 10 மணியில் இருந்து கமல்ஹாசன் நேர்காணல் நடத்தினார். இதற்காக நேற்று முதல் 3 நாட்களுக்கு நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சென்னையில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

முதலில் நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினர்களிடம் நேர்காணலை முடித்து அவர்களில் தகுதியான நபர்களை வேட்பாளர்களாக கமல்ஹாசன் தேர்வு செய்ய உள்ளார்.

இந்த நேர்காணலின் போது கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் முருகவேல், மவுரியா, குமரவேல், உமாதேவி, சந்தோஷ்பாபு ஆகியோரும் இடம் பெற்று இருப்பார்கள்.

இது தவிர வேட்பாளர்கள் தேர்வு செய்வதற்காக கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களும் நேர்காணலின் போது பங்கேற்றனர்.

சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த மூத்த அரசியல் கட்சி தலைவர் பழ.கருப்பையா, அப்துல்கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ரங்கராஜன், சட்ட பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம், தேர்தல் பிரசார வியூக அலுவலக நிர்வாகியான சுரேஷ் அய்யர் ஆகியோரும் வேட்பாளர் தேர்வில் பங்கேற்றனர்.

இன்று முதல் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளது. சென்னை, செங்கல்பட்டு மண்டலத்துக்கு உட்பட்ட நிர்வாகிகளிடமும் இன்று பகலில் நேர்காணல் நடைபெறுகிறது.

அடுத்த 5 நாட்களும் தொடர்ச்சியாக நேர் காணலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர் வருகிற 7-ந்தேதி அன்று வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.

வேட்பாளர் தேர்வின் போது விண்ணப்பித்தவர்கள் பற்றிய பின்னணி விவரங்களை முழுமையாக கமல்ஹாசன் ஆய்வு செய்தார். தொகுதியில் செல்வாக்குடன் திகழும் குற்ற பின்னணி இல்லாத நபர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்ய கமல்ஹாசன் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தார். அது இன்றைய நேர்காணலின்போது முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.

Tags:    

Similar News