செய்திகள்
சென்னை மாநகராட்சி

சென்னையில் 10 ஆயிரம் இடங்களில் பிரசார பேனர்கள், சுவரொட்டிகள் அகற்றம்

Published On 2021-03-01 06:10 GMT   |   Update On 2021-03-01 06:10 GMT
மாநகராட்சி அதிகாரிகள் சென்னை மாநகர பகுதியில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை:

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 16 சட்ட மன்ற தொகுதிகளிலும் சுவர்களில் ஒட்டுப்பட்டுள்ள போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களை அப்புறப்படுத்த மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சென்னை மாநகர பகுதியில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து சென்னையில் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளது. சுவர் விளம்பரங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதுவரை 10 ஆயிரம் இடங்களில் போஸ்டர்களும், சுவர் விளம்பரங்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக தி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுமார் 700 இடங்களில் இந்த பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

பெரம்பூர் தொகுதியில் 228 இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன. இதே போன்று 84 இடங்களில் மின்கம்பங்களில் கட்டப்பட்டிருந்த கொடிகளும் அகற்றப்பட்டுள்ளன.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 90 இடங்களில் போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன.

மொத்தம் 335 இடங்களில் சென்னை மாநகர் முழுவதும் மின் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த கொடிகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. 6,900 போஸ்டர்களும் கிழித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பொதுஇடங்களில் அரசியல் கட்சியினர் போஸ்டர்களை ஒட்டுவது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கருதப்படும். எனவே அதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

Similar News