செய்திகள்
கோவை ரெயில் நிலையத்தில் இருந்து துணை ராணுவத்தினர் வெளியே வந்த காட்சி.

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி- துணை ராணுவத்தினர் 94 பேர் கோவை வருகை

Published On 2021-03-01 03:28 GMT   |   Update On 2021-03-01 03:28 GMT
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவத்தினர் 94 பேர் கோவை வந்தனர்.
கோவை:

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டதும் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்கள் அலுவலகங்களும் மூடி சீல் வைக்கப்பட்டன. சுவர்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள், கட்சி விளம்பரங்கள் அகற்றப்பட்டன.

அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பரிசுபொருட்கள் மற்றும் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க 30 பறக்கும் படை அமைக்கப் பட்டு உள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் கோவையில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து துணை ராணுவத்தினர் என்று அழைக்கப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (சி.எஸ்.ஐ.எப்.) 94 பேர் (ஒரு கம்பெனி) ரெயில் மூலம் நேற்று முன்தினம் நள்ளிரவு கோவை வந்தனர். அவர்கள், கோவை ராம்நகரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

அவர்கள் தங்களின் உடைமைகள், துப்பாக்கிகள், சமையலுக்கு தேவை யான அடுப்பு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களையும் எடுத்து வந்து உள்ளனர். முதல் நாளான நேற்று அவர்கள் ஓய்வு எடுத்தனர். போலீசார் மற்றும் பறக்கும் படை அதிகாரிகளுடன் இணைந்து துணை ராணுவத்தினர் தேர்தல் பாதுகாப்பு, வாகன சோதனை, பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
Tags:    

Similar News