செய்திகள்
ராகுல்காந்தி

தேர்தல் பிரசாரம்: ராகுல்காந்தி நாளை குமரி வருகை

Published On 2021-02-28 10:41 GMT   |   Update On 2021-02-28 10:41 GMT
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தென் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நாளை (1-ந்தேதி) குமரி மாவட்டம் வருகிறார்.

நாகர்கோவில்:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தென் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நாளை (1-ந்தேதி) குமரி மாவட்டம் வருகிறார். கன்னியாகுமரி சர்ச் ரோட்டில் காலை 10 மணிக்கு தனது பிரசாரத்தை தொடங்குகிறார். அங்கு ரோடு ஷோ மூலமாக மக்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் 10.45 மணிக்கு அகஸ்தீஸ்வரத்தில் உள்ள முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். 11.30 மணிக்கு நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் உள்ள இந்திராகாந்தி சிலை முன்பும், 12.30 மணிக்கு தக்கலையில் உள்ள காமராஜர் சிலை முன்பும் மக்களை சந்தித்து பேசுகிறார். மதியம் 1 மணிக்கு முளகுமூடு புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியில் 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளை சந்தித்து சிறப்புரையாற்றுகிறார்.

2.45 மணிக்கு குளச்சல் பஸ் நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலை முன்பும், 3.30 மணிக்கு கருங்கல் ராஜீவ்காந்தி சிலை முன்பும் மக்களை சந்தித்து பேச உள்ளார். இதுபோல பாறகாணி பகுதியில் மீனவர்களை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 5.45 மணிக்கு களியக்காவிளையில் மக்களை சந்தித்து ராகுல் காந்தி பேசுகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் செல்கிறார்.

ராகுல்காந்தி வருகையையொட்டி டெல்லியில் இருந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரது நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குமரி மாவட்டம் வருகை தரும் ராகுல்காந்திக்கு குமரி மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு குமரி மாவட்டத்திற்கு ராகுல்காந்தி வருவது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தியை வரவேற்க தொண்டர்களும் தயாராகி வருகின்றனர்.

ராகுல்காந்தியை வரவேற்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென்காசியில் இருந்து நாளை காலை ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி சுற்றுலா மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் ராகுல்காந்தி வந்து இறங்குகிறார். பின்னர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு நாளை மாலை களியக்காவிளை திருத்துவபுரம் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட்டில் இருந்து திருவனந்தபுரம் செல்கிறார்.

2 இடங்களிலும் ஹெலிகாப்டர் வந்து இறங்குவதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். இன்று மாலை ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்ச்சியும் நடக்கிறது.

Tags:    

Similar News