செய்திகள்
பஸ் ஸ்டிரைக் வாபஸ்

அரசு பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்

Published On 2021-02-27 11:42 GMT   |   Update On 2021-02-27 11:42 GMT
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை:

14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு உடனடி ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25-ந்தேதி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
 
தமிழகம் முழுவதும் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இன்று மூன்றாவது நாளாக போராட்டம் நீடித்தது. அரசு பேருந்துகள் வழக்கத்தை விட குறைந்த அளவில் இயங்கியதால் பல மாவட்டங்களில் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் நல ஆணையம் அழைத்தது. அதன்படி, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று மாலையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தொழிலாளர் நல ஆணையம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. 

என்னும், வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அதன்படி போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். புதிதாக அமைய உள்ள ஆட்சியில் கோரிக்கைகளை எடுத்துரைத்து நிறைவேற்றும்படி வலியுறுத்த உள்ளதாக கூறினர்.

மக்கள் நலன் கருதி போராட்டத்தை திரும்ப பெறும்படி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்த நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News