செய்திகள்
சென்னை ஐகோர்ட்

திமுக எம்.பி.க்கு எதிரான வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு

Published On 2021-02-27 07:38 GMT   |   Update On 2021-02-27 07:38 GMT
திமுக எம்.பி.க்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

சென்னை:

கலைஞர் வாசகர் வட்டம் என்ற அமைப்பின் சார்பில் நடந்த கருத்தரங்கில் கடந்த ஆண்டு பேசிய தி.மு.க. அமைப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி நீதிபதிகள் குறித்து சில கருத்துகளை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை சென்னையில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்தார்.

இந்த நிலையில் இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் நடவடிக்கையால் தான் எஸ்சி., பிரிவைச் சேர்ந்தவர்கள் ஐகோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றதாக ஆர். எஸ்.பாரதி கூறியுள்ளார். அதுவும் மத்திய பிரதேசத்தில் எஸ்.சி பிரிவைச் சேர்ந்த ஒரு நீதிபதி கூட கிடையாது என்றும் பேசியுள்ளார். இவரது பேச்சு ஆதாரமற்றது.

நாட்டிலேயே திராவிட இயக்கத்தினால் தான் எஸ்.சி. எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர்கள் நீதிபதியாக பதவி ஏற்றது போல இவர் பேசியுள்ளார்.

இவரது பேச்சு உயர் பதவியை வகித்த ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதியை அவமதிக்கும் விதமாக உள்ளது. இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை ரத்து செய்ய முடியாது.

இவர் மீதான வழக்கை சிறப்பு கோர்ட்டு தினந் தோறும் என்ற அடிப்படையில் விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். அறிவு சார்ந்த விவாதங்கள் விமர்சனங்கள் வரவேற்கத்தக்கது. ஆனால் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தலைவர்கள் விருப்பம்போல் பேசுகின்றனர். ஒருவர் மீது ஒருவர் வி‌ஷத்தை கக்குகின்றனர். இது வருங்கால சந்ததியினருக்கு உகந்த தல்ல. ஆர்.எஸ். பாரதியின் மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Tags:    

Similar News