செய்திகள்
துரைமுருகன்

பொதுக்குழு, மாநில மாநாடு ஒத்திவைப்பு: தொகுதி பங்கீடு குறித்து பேச குழு- மின்னல் வேகத்தில் திமுக

Published On 2021-02-26 17:14 GMT   |   Update On 2021-02-26 17:14 GMT
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக பொதுக்குழு, மாநில மாநாடுகளை ஒத்திவைத்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச குழு அமைத்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. மார்ச் மாதம் 12-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 19-ந்தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

இதனால் தேர்தலுக்கு 14 நாட்களே உள்ளன. அதிகபட்சமாக 21 நாட்கள் எனச் சொல்லலாம். இந்த நிலையில் திமுக தேர்தல் வேலைகளை மின்னல் வேகத்தில் முடுக்கிவிடத் தொடங்கியுள்ளது.

அந்தக் கட்சியின் பொதுக்குழு மற்றும் திருச்சி மாநில மாநாடு ஆகியவை அடுத்த மாதம் நடைபெற இருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இரண்டையும் ஒத்திவைத்துள்ளது.

மேலும், தொகுதி பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர். பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் கே.என். நேரு, பெரியசாமி, பொன்முடி, ஆர்.எஸ். பாரதி, எ.வ. வேலு, சுப்புலெட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இத்தகவலை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் திமுக மின்னல் வேகத்தில் தேர்தல் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளது.
Tags:    

Similar News