செய்திகள்
ராணுவ வீரர் பால்சாமியின் உடலை போலீஸ் சூப்பிரண்டு-துணை போலீஸ்சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் சுமந்து வந்த காட்சி

நக்சலைட் தாக்குதலில் பலியான மதுரை ராணுவ வீரர் உடலை சுமந்து சென்ற போலீஸ் அதிகாரிகள்

Published On 2021-02-26 13:32 GMT   |   Update On 2021-02-26 13:32 GMT
நக்சலைட் தாக்குதலில் பலியான மதுரை ராணுவ வீரர் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
புதூர்:

மதுரை அழகர்கோவில் அருகே உள்ள கள்ளந்திரி பொய்கைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பால்சாமி (வயது33). ராணுவ வீரரான இவர் இந்தோ-திபெத் எல்லை காவல்படையில் நக்சல் தடுப்பு பிரிவு படையில் கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

சம்பவத்தன்று இவர் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டம் சோன்பூர் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது நக்சல் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த தாக்குதலில் ராணுவ வீரர் பால்சாமி வீரமரணம் அடைந்தார். இதுபற்றி மதுரையில் வசித்து வரும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையறிந்த அவர்கள் கதறி அழுதனர்.

பால்சாமி மனைவி பெயர் ராமலட்சுமி (26). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் தான் ஆகிறது. இந்த தம்பதிக்கு 2 வயதில் நிதிக்‌ஷா என்ற பெண் குழந்தை உள்ளது.

நக்சல் தாக்குதலில் பலியான பால்சாமியின் உடல் விமானம் மூலம் பெங்களூரு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கு இருந்து ராணுவ வண்டியில் பால்சாமி உடல் சொந்த ஊரான மதுரை பொய்கைகரைப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.

அவரது உடலை பார்த்து மனைவி மற்றும் உறவினர்கள் கதறினார்கள். மதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், ஊமச்சிக்குளம் டி.எஸ்.பி. விஜயகுமார், மதுரை கிழக்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மூர்த்தி மற்றும் கிராம மக்கள், நண்பர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏராளமானேர் பால்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அவரது உடல் அடங்கிய பெட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், துணை சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் சுமந்து வந்தனர்.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து அவரது உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
Tags:    

Similar News