செய்திகள்
கோப்புபடம்

திருச்சியில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் 32 பவுன் நகைகள் கொள்ளை

Published On 2021-02-26 12:45 GMT   |   Update On 2021-02-26 12:45 GMT
திருச்சியில் பட்டப்பகலில் பெண் போலீஸ் ஏட்டு வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
திருச்சி:

திருச்சி குண்டூர் அய்யம்பட்டி பெத்லகம் நகரை சேர்ந்தவர் துளசிராம். இவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு கடையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரமணி.

இவர் திருச்சி விமானநிலைய போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று ரமணியும், அவரது கணவரும் வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

இந்தநிலையில் நேற்று மாலை வேலை முடிந்து ரமணி வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தார்.

அங்கு பீரோ உடைக்கப்பட்டு அங்கிருந்த 32 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. உடனே இது குறித்து நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மோப்பநாய் உதவியுடன் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள். விரல்ரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தை நோட்டமிட்டே மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும். இதையடுத்து நவல்பட்டு போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். திருச்சியில் போலீஸ் ஏட்டு வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News