செய்திகள்
வேலை நிறுத்தம் காரணமாக புதிய பஸ் நிலையத்தில் பஸ் கிடைக்காமல் பயணிகள் காத்திருந்த காட்சி.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் - 30 சதவீத பஸ்களே இயக்கப்பட்டதால் பயணிகள் பாதிப்பு

Published On 2021-02-26 12:26 GMT   |   Update On 2021-02-26 12:26 GMT
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தால் 30 சதவீத பஸ்களே இயக்கப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்தம் காரணமாக 30 சதவீத பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். மாற்று ஏற்பாடு செய்யாததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் நேற்று காலை முதல் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக நேற்று காலை ராமநாதபுரம் மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து பெரிய அளவில் முடங்கியது. அதிகஅளவில் செல்லக்கூடிய மதுரை, திருச்சி, ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கான பஸ்கள் இயங்காததால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர். இதன்காரணமாக ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. பயணிகள் பஸ்சுக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிந்தது பார்க்க பரிதாபமாக இருந்தது. பல்வேறு தொழிற்சங்கங்கள் பஸ்களை இயக்கமாட்டோம் என்று அறிவித்திருந்த போதிலும் அண்ணா தொழிற்சங்கத்தினர் மட்டுமே சில பஸ்களை இயக்கியதால் ஒரு சில பஸ்கள் சென்றுவந்தன.

இந்த பஸ்களில் அதிகமான பயணிகள் ஏறியதால் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அண்ணா தொழிற்சங்கத்தினரும் முக்கியமாக கருதப்படும் ஒருசில குறிப்பிட்ட அளவிலான வழித்தடங்களில் மட்டுமே பஸ்களை இயக்கி சென்றதால் பெரும்பாலான வழித்தடங்களுக்கு பஸ்கள் செல்லவில்லை. குறிப்பாக கிராமப்புறங்களுக்கு பஸ்கள் செல்லாததால் பயணிகள் சொல்ல முடியாத அவதியடைந்தனர். இந்த அசாதாரண சூழ்நிலையில் தனியார் பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டாலும் அதிகளவில் கட்டணம் வசூலித்ததாகவும், இடையில் உள்ள நிறுத்தங்களில் இறங்குவதற்கு பயணிகளை ஏற்ற மறுத்ததாகவும் புகார் தெரிவித்தனர். ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் அவ்வப்போது இயக்கப்பட்ட ஒருசில பஸ்களில் பயணிகள் போட்டிபோட்டுக்கொண்டு ஏறினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரத்தில் நகர் மற்றும் புறநகர் டெப்போக்களும், பரமக்குடி, கமுதி, ராமேசுவரம், முதுகுளத்தூர் டெப்போக்களும் உள்ளன. போக்குவரத்து ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தம் காரணமாக நேற்றுகாலை முதல் பிற்பகல் நேரம் வரையில் மொத்தம் 321 பஸ்களில் 103 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக 30 சதவீத அளவிலான பஸ்களே இயக்கப்பட்டன.

அத்தியாவசிய தேவைகளுக்காக செல்பவர்கள் வேறு வழியின்றி ஆட்டோக்கள் உள்ளிட்டவைகளை நாடிச்சென்றனர். இதன்காரணமாக பஸ் நிலையங்களில் ஆட்டோக்களின் பயன்பாடு அதிகஅளவில் இருந்தது. ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச்சென்றனர். போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பஸ் போக்குவரத்து முடங்கிய நிலையில் தனியார் பள்ளி கல்லூரி டிரைவர்களை பயன்படுத்தி கடந்த காலங்களை போல மாற்று ஏற்பாடு செய்யவில்லை. ராமநாதபுரம் பஸ்நிலையத்தில் பஸ்கள் இயக்கப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக சில அரசு பஸ்களை கொண்டு வந்து நிறுத்தி இருந்தனர். இந்த பஸ்களில் ஏறிய பயணிகள் நீண்ட நேரமாகியும் இயக்கப்படாததால் ஏமாற்றுவேலை என்று அறிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அந்த பஸ்களை எடுத்துச்சென்று பணிமனையில் நிறுத்தினர்.

பஸ்கள் பாதியளவுகூட இயக்கப்படாததால் பயணிகள் வேன், கார், ஷேர் ஆட்டோ முதலியவற்றில் கூடுதல் கட்டணம் கொடுத்து சென்றுவந்தனர். போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அதிகஅளவில் பாதிக்கப்பட்டது. ரெயில் போக்குவரத்தும் திருச்சி, மதுரை போன்ற பகுதிகளுக்கு பஸ் இல்லாததால் மக்கள் சொல்ல முடியாத அவதி அடைந்து வந்தனர். பஸ்களின் இயக்கம் பாதிக்கப்பட்டதால் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கார் வேன் முதலியவற்றை நாடிச்சென்றனர்.

டிரைவர்கள், கண்டக்டர்கள் தவிர போக்குவரத்து கழக அலுவலக ஊழியர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 25 சதவீத ஊழியர்களே பணியில் ஈடுபட்டதால் போக்குவரத்து கழக அலுவலக பணிகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.

கடந்த காலங்களில் முன்எச்சரிக்கையாக மாற்று ஏற்பாடுகள் செய்து அதிக பயணிகள் சேரும்போது அந்த பகுதிகளுக்கு பஸ்களை இயக்கி நிலைமையை சரிசெய்ததுபோல இந்த முறை முன்எச்சரிக்கையுடன் செயல்படவில்லை என்பதை பயணிகளின் அவதியை வைத்து தெளிவாக காண முடிந்தது. இந்த வேலைநிறுத்த போராட்டம் தொடரும் வாய்ப்பு உள்ளதால் உடனடியாக முறையாக திட்டமிட்டு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News