செய்திகள்
கொலை வழக்கில் கைதான 4 பேரை காணலாம்

பாணாவரம் அருகே நடந்த வாலிபர் கொலையில் 4 பேர் கைது

Published On 2021-02-26 06:37 GMT   |   Update On 2021-02-26 06:37 GMT
பாணாவரம் அருகே நடந்த வாலிபர் கொலையில் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த அண்ணன்-தம்பி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த ரங்காபுரம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் நித்தியானந்தன் என்ற பிளேடு நித்யா (வயது 33). இவர், நேற்று முன்தினம் மாலை சோளிங்கர்-பாணாவரம் சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பாணாவரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் சென்றபோது, அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3 பேர் நித்தியானந்தத்தை மடக்கி கத்தியால் வெட்டிக் கொலை செய்தனர். பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

பாணாவரம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த பாலகிருஷ்ணனின் மகன்கள் நிசாந்தன் (32), வினோத்குமார் (31), வாலாஜா கச்சாலநாயக்கர் தெருவைச் சேர்ந்த பாபுவின் மகன் சேட்டு (26), வாலாஜா கொசத்தெருவைச் சேர்ந்த லாரன்ஸ் என்பவரின் மகன் பிரதிப்குமார் (21) ஆகிய 4 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

ஒரு வாரத்துக்கு முன்பு நித்தியானந்தன் குடிபோதையில் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த நிசாந்தன் என்பவரை தாக்கி உள்ளார். மேலும் அடிக்கடி நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும்போது நிசாந்தனை, நித்தியானந்தன் முறைத்துப் பார்த்துள்ளார். அதில் மன உளைச்சலில் இருந்த நிசாந்தனை அவரின் தம்பி வினோத்குமார் விசாரித்துள்ளார். அப்போது அவர், நித்தியானந்தத்தை பற்றி கூறி உள்ளார்.

உடனே வினோத்குமார் மற்றும் நண்பர்களான பிரதிப்குமார், சேட்டு ஆகியோருடன் சேர்ந்து நித்தியானந்தனை தீர்த்து கட்ட முடிவு செய்து, கொலை திட்டத்தை நிறைவேற்றியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நிசாந்தன், இவரின் தம்பி வினோத்குமார், சேட்டு, பிரதிப்குமார் ஆகிய 4 பேரை பாணாவரம் போலீசார் கைது செய்து சோளிங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News