செய்திகள்
கைது

நிலக்கோட்டையில் ஓடும் லாரியில் பெயிண்ட் டின்கள் திருடிய கும்பல்

Published On 2021-02-24 08:27 GMT   |   Update On 2021-02-24 08:27 GMT
நிலக்கோட்டை அருகே ஓடும் லாரியில் பெயிண்ட் டின்களை திருடிய 7 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

நிலக்கோட்டை:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர்கணேஷ். இவர் தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கோவையில் இருந்து மதுரைக்கு பெயிண்ட் டின்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டு இருந்தார்.

திண்டுக்கல் அருகே உள்ள செம்பட்டி - நிலக்கோட்டை ரோட்டில் மைக்கேல்பாளையம் என்ற இடத்தில் வந்த போது ஆம்னி வேன் பின் தொடர்ந்து வந்தது. திடீரென வேனில் இருந்த ஒரு கும்பல் லாரியின் மீது தாவி அதில் இருந்த பெயிண்ட் டின்களை எடுத்து வேனில் தூக்கி போட்டனர்.

சினிமாவில் வரும் காட்சிகளைப் போல நடந்த இந்த சம்பவத்தை சங்கர்கணேஷ் பார்த்து அதிர்ச்சியடைந்தார். கொள்ளையர்கள் அதிகமாக இருந்ததால் சத்தம் போடாமல் சிறிது தூரம் சென்று அருகில் போர்வெல் வேலை பார்த்துக் கொண்டு இருந்த ஒரு இடத்தில் லாரியை சங்கர்கணேஷ் நிறுத்தினார். பின்னர் அங்கு உள்ளவர்களிடம் தனது லாரியில் ஏறி சிலர் திருடி வருவதாகவும், தனக்கு உதவுமாறும் அவர் கேட்டார். இதனையடுத்து அங்கு இருந்த பணியாளர்கள் ஓடி வந்தனர். இதை பார்த்ததும் கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர்.

நள்ளிரவு நேரம் ஆகி விட்டதால் சங்கர்கணேஷ் பங்களாபட்டி என்ற இடத்தில் நிறுத்தி விட்டு காலையில் பார்த்தார். பின்னர் தனது லாரியில் திருடு போனது குறித்து விளாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனிடையே தோட்டத்தில் சந்தேகத்துக்கு இடமாக சிலர் பதுங்கி இருப்பது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் தோட்டத்தில் பதுங்கி இருந்தவர்களை சுற்றி வளைத்த போது அவர்கள்தான் லாரியில் இருந்த பெயிண்ட் டின்களை திருடியது என தெரிய வந்தது.

இதனையடுத்து லாரியில் திருடிய மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 31), நாகார்ஜூன் (24), வீரமணி (21), பிரபாகரன் (27), நாகமலை (22), பரதன் (21), செம்பட்டிகாமுபிள்ளை சத்திரத்தைச் சேர்ந்த விஜயகுமார் (21) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 பெயிண்ட் டின்களையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் வேறு ஏதேனும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News