செய்திகள்
பிரதமர் மோடி

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார் - நெய்வேலியில் புதிய அனல்மின் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

Published On 2021-02-24 00:08 GMT   |   Update On 2021-02-24 00:08 GMT
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 25-ந் தேதி (நாளை) தமிழகம் மற்றும் புதுச்சேரி வருகிறார்.
சென்னை:

நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி நெய்வேலியில் புதிய அனுமின் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 25-ந் தேதி (நாளை) தமிழகம் மற்றும் புதுச்சேரி வருகிறார். புதுச்சேரியில் காலை 11.30 மணிக்கு பல வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு கோயம்புத்தூரில் ரூ.12,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். நெய்வேலியில் புதிய அனல்மின் திட்டத்தை நாட்டுக்கு மோடி அர்ப்பணிக்கிறார்.

இது 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனில் வடிவமைக்கப்பட்ட லிக்னைட் (பழுப்பு நிலக்கரி) அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையம். இதில் உள்ள 2 மின் உற்பத்தி நிலையங்களும் தலா 500 மெகா வாட் திறன் உள்ளது. ரூ.8 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 2,670 ஏக்கர் பகுதியில் அமைக்கப்பட்ட என்.எல்.சி.ஐ.எல். நிறுவனத்தின் 709 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தையும் மோடி அர்ப்பணித்து வைக்கிறார். இந்த திட்டம் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல கீழ் பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவதோடு, வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 8 வழி கோரம்பள்ளம் பாலம் மற்றும் ரெயில்வே பாலத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதற்கு சாகர்மாலா திட்டம் மூலம் நிதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ரூ.20 கோடி செலவில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 மெகாவாட் சூரிய மின் சக்தி தொகுப்புக்கும் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் திருப்பூர் வீரபாண்டியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டிய 1,280 குடியிருப்புகள், திருக்குமரன் நகரில் கட்டப்பட்ட 1,248 குடியிருப்புகள், மதுரை ராஜாக்கூரில் கட்டப்பட்ட 1,088 குடியிருப்புகள், திருச்சி இருங்கலூரில் கட்டப்பட்ட 1,088 குடியிருப்புகள் ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். கோவை, மதுரை, சேலம், தஞ்சை, வேலூர், திருச்சி, திருப்பூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்பட 9 ‘ஸ்மார்ட்' நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களை அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம்-நாகப்பட்டினம் வரையிலான 56 கி.மீ தூரம் 4 வழி தேசிய நெடுஞ்சாலை, சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் சிறு துறைமுகம் உருவாக்குவதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இதேபோல புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் தடகள வீரர்களுக்கான ‘சிந்தடிக்' ஓடு தளத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். புதுச்சேரி ஜிப்மர் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ரத்த மையத்தையும், புதுச்சேரி லாஸ்பேட்டையில் 100 படுக்கைகள் கொண்ட மாணவிகள் விடுதியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

புதுச்சேரி வரலாற்றின் அடையாளமாக இருந்த மாரி கட்டிடம், பிரெஞ்சுகாரர்களால் கட்டப்பட்டது. தற்போது அதே கட்டிடக் கலையில் ரூ.15 கோடி செலவில் அந்த கட்டிடம் மீண்டும் கட்டப்பட்டுள்ளது. மீண்டும் கட்டப்பட்ட பாரம்பரிய மாரி கட்டிடத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
Tags:    

Similar News