செய்திகள்
சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 253 பேர் கைது

Published On 2021-02-23 20:46 GMT   |   Update On 2021-02-23 20:46 GMT
திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 253 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர்:

சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த தொகை வழங்க வேண்டும். அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பங்கேற்ற பெண்கள் பலர் கருப்பு நிற சேலையை அணிந்திருந்தனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் பி.பாக்கியம் தலைமை தாங்கி பேசினார். துணைத்தலைவர் ஜெயமேரி வரவேற்று பேசினார். மாநில செயலாளர் சத்தி, இணைச்செயலாளர் நாகராஜன், ஓய்வு பெற்றோர் சங்க மாவட்ட தலைவர் முத்தமிழ்ராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராணி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கிடையே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்லடம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தை கைவிடும்படி தெரிவித்தனர். இதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும், பல்லடம் ரோட்டின் மற்றொரு சாலைக்கு சென்றும் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்ற பெண் போலீசார், பெண்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.

இதன் காரணமாக அங்கு தள்ளு-முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட 9 ஆண்கள் உள்பட 253 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து வீரபாண்டி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News