செய்திகள்
பாஜக இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா பேசிய காட்சி

திமுக இந்து விரோத கட்சி... அதை தோற்கடிக்க வேண்டும்- பாஜக இளைஞரணி தலைவர் பரபரப்பு பேச்சு

Published On 2021-02-22 04:30 GMT   |   Update On 2021-02-22 07:44 GMT
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்றால் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என பாஜக இளைஞரணி தலைவர் பேசினார்.
சேலம்:

தமிழக பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணி மாநில மாநாடு சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு இளைஞர் அணி மாநில தலைவர் பி.செல்வம் தலைமை தாங்கினார். மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், தேசிய பொதுச்செயலாளர் ரவி, இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா உள்பட பலர் பங்கேற்றனர்.

மாநாட்டில் இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா பேசுகையில் திமுகவை கடுமையாக தாக்கினார். அவர் பேசியதாவது:-

திமுக இந்து விரோதப் போக்கைக் கடைபிடிக்கிறது. மிகவும் மோசமான இந்து விரோதக் கொள்கையைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. ஆகையால் நாம் திமுகவைத் தோற்கடிக்க வேண்டும். 

திமுக ஆட்சிக்கும் வரும் போதெல்லாம் கோயில்கள் நிலங்களை அபகரிப்பது நடக்கும். திமுக ஆட்சியில் இந்து மத விரோத அறிக்கைகளுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், இப்போது தேர்தல் நெருங்குவதால் இந்து மதத்தை ஆதரிப்பதுபோல் நடிக்கிறார்கள்.

பாஜக இந்திக் கட்சி என திமுக பொய்ப் பிரச்சாரம் செய்துவருகிறது. அப்படி, பாஜக இந்திக் கட்சியாக இருந்திருந்தால் கர்நாடகத்தைச் சேர்ந்த நான், கன்னடம் பேசும் நான் பாஜக இளைஞரணி தேசியத் தலைவராகியிருக்க முடியுமா? இல்லை தமிழகத்தில் பிறந்து தமிழ் பேசும் வானதி ஸ்ரீனிவாசன் தான் பாஜக மகளிரணி தேசியத் தலைவராகியிருக்க முடியுமா? பாஜக பிராந்திய மொழிகளுக்கான கட்சி. பிராந்திய மொழி நன்றாக இருக்க வேண்டுமென்றால் இந்துத்துவம் வலுவாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் அது நடக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News