செய்திகள்
மெட்ரோ ரெயில்

சென்னை மெட்ரோ ரெயில் புதிய கட்டணம் விபரம் அறிவிப்பு

Published On 2021-02-21 10:21 GMT   |   Update On 2021-02-21 10:21 GMT
சென்னை மெட்ரோ ரெயில் புதிய கட்டண விவரத்தை நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. இதனை பயணிகள் பெரிதும் வரவேற்று உள்ளனர்.

சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 29-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. முதல்கட்ட பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு பல்வேறு வழித்தடங்களில் 54.15 கி.மீட்டர் தூரத்துக்கு இயக்கப்படுகிறது.

அடுத்து 118.90 கி.மீட்டர் தூரத்துக்கு சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.

இதுவரை 7.25 கோடி பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தி உள்ளனர். மெட்ரோ ரெயிலை மேலும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் வகையில் அதன் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் மெட்ரோ ரெயில் கட்டணம் ரூ.10 முதல் 20 வரை குறைக்கப்படுவதாக நேற்று அறிவித்தார். இந்த கட்டண நடைமுறை நாளை முதல் (திங்கட்கிழமை) நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி புதிய கட்டண விவரத்தை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. முன்பு அதிக பட்சமாக இருந்த ரூ.70 கட்டணம் தற்போது ரூ.50 ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது.

சென்ட்ரல்- விமான நிலையம் கட்டணம் ரூ.40 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு இது ரூ.50 ஆக இருந்தது. இதேபோல் கோயம்பேடு- விம்கோ நகர் இடையே மெட்ரோ ரெயில் கட்டணம் ரூ.50 ஆக குறைந்துள்ளது. இதற்கு முன்பு இது ரூ.60 நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

மற்ற இடங்களுக்கு மெட்ரோ ரெயில் புதிய கட்டணம் விவரம் வருமாறு:-

கோயம்பேடு- ஆலந்தூர்- ரூ.30, கோயம்பேடு- சைதாப்பேட்டை- ரூ.40, கோயம்பேடு- ஐகோர்ட்டு- ரூ.40, சென்ட்ரல்- கோயம்பேடு- ரூ.30, சென்ட்ரல்- கிண்டி-ரூ.30, சென்ட்ரல்- டி.எம்.எஸ்.-ரூ.30, சென்டரல்- விம்கோநகர்-ரூ40, சென்ட்ரல்- வண்ணாரப்பேட்டை-ரூ.30,

வடபழனி- சென்ட்ரல்-ரூ.40, எழும்பூர்- விமான நிலையம் ரூ.40, விமான நிலையம்- விம்கோ நகர்- ரூ.50, தண்டையார்பேட்டை- விமான நிலையம் ரூ.50, எழும்பூர்- கோயம்பேடு-ரூ.30,

கிண்டி - ஐகோர்ட்டு- ரூ.40, அண்ணாநகர் டவர்- விமான நிலையம்- ரூ.40, எழும்பூர்- ஷெனாய் நகர்- ரூ.20, எழும்பூர்-அண்ணா நகர்-ரூ.30, அசோக்நகர்- ஆயிரம் விளக்கு-ரூ.40, எழும்பூர்- பரங்கி மலை ரூ.40, திருவொற்றியூர்- விமான நிலையம் ரூ.50, திருவொற்றியூர்- எழும்பூர்-40.

ஆட்டோ மற்றும் வாடகை காரின் கட்டணத்துடன் ஒப்பிடும்போது மெட்ரோ ரெயில் கட்டணம் குறைவு என்பதால் இதனை பயணிகள் பெரிதும் வரவேற்று உள்ளனர்.

இதேபோல் கியூ.ஆர்.கோடு மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தொடுதல் இல்லா மதிப்பு கூட்டு பயண அட்டை மூலம் பயணம் செய்பவர்களுக்கு மேலும் கூடுதலாக அனைத்து பயணசீட்டுகளுக்கும் அடிப்படை கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்பட்டு உள்ளது.

ஒருநாள் வரையறுக்கப்படாத கட்டணம் தற்போது தொடங்கப்பட்டு உள்ள வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான கூடுதல் வழித்தடத்தையும் சேர்த்து மாற்றம் இன்றி ரூ.100 ஆக உள்ளது.

ஒரு மாத வரையறுக்கப்படாத மெட்ரோ ரெயில் பயணத்திற்கு கூடுதல் வழித்தடத்தையும் சேர்த்து மாற்றம் இன்றி ரூ.2,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News