செய்திகள்
கோப்பு படம்.

கோவையில் பப்ஜி கேம் மூலம் பழகி பெண் வங்கி அதிகாரி கற்பழிப்பு- வாலிபருக்கு வலைவீச்சு

Published On 2021-02-21 09:52 GMT   |   Update On 2021-02-21 09:52 GMT
கோவையில் ஆசை வார்த்தை கூறி 24 வயது பெண் வங்கி அதிகாரியை கற்பழித்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை:

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் கேரளாவை சேர்ந்தவள். அந்த பகுதியில் உள்ள வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறேன். நான் பணி முடிந்து வீட்டிற்கு வந்ததும் ஆன்லைனில் பப்ஜி கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். இந்த கேம் ஆன்லைனில் விளையாடுவதால் பலர் ஒன்று சேர்ந்து விளையாடலாம். அப்படி ஒரு நாள் நான் விளையாடிய போது வாலிபர் ஒருவர் அறிமுகமானார். அவர் தனக்கு கேரளா மாநிலம் இடகொச்சி என்றும், தனது பெயர் ஹரிஷ்(25) என்றும் கூறினார். தொடர்ந்து நாங்கள் 2 பேரும் பப்ஜி கேம் விளையாடி வந்தோம். அப்போது ஒரு நாள் ஹரிஷ் என்னிடம் செல்போன் நம்பர் கேட்டார். நானும் கொடுத்தேன். தொடர்ந்து போன் செய்து பேசி வந்தோம். நாளடைவில் நாங்கள் 2 பேரும் நெருங்கிய நண்பர்களாக மாறினோம்.

இந்த நிலையில் ஒரு நாள் ஹரிஷ் என்னை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது நான் கோவையில் நண்பர் ஒருவரை பார்க்க செல்வதாகவும், நீயும் என்னுடன் வந்தால் நன்றாக இருக்கும் என கூறினார். முதலில் மறுப்பு தெரிவித்த நான், வாலிபரின் தொடர் வற்புறுத்தலால் வருவதாக கூறினேன். அதன்படி சம்பவத்தன்று 2 பேரும் கேரளாவில் இருந்து பஸ் மூலம் கோவை காந்திபுரத்திற்கு வந்தோம்.

அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்து 2 நாட்கள் தங்கினோம்.அப்போது ஹரிஷ் என்னிடம் ஆசை வார்த்தை கூறி என்னை கற்பழித்தார். பின்னர் 2 பேரும் கேரளாவுக்கு சென்று விட்டோம். ஊருக்கு சென்ற சில நாட்களில் என்னிடம் பேசுவதை ஹரிஷ் தவிர்த்தார்.இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நான் சம்பவம் குறித்து கேரள மாநிலம் பல்லுருத்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அவர்கள் சம்பவம் நடந்த இடம் கோவை என்பதால் அங்கு சென்று புகார் கொடுங்கள் என்றனர். அதனால் கோவை வந்து புகார் கொடுத்துள்ளேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கி அதிகாரியை ஏமாற்றி கற்பழித்த வாலிபரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News