செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

Published On 2021-02-21 07:57 GMT   |   Update On 2021-02-21 07:57 GMT
அடுத்த 24 மணிநேரத்துக்கு புதுச்சேரி மற்றும் கடலூர், கள்ளக்குறிச்சி உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

வங்கக்கடலில் வீசும் வலுவான கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்திலும், புதுவையிலும் சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடல் கிழக்கு திசை காற்று தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் அடுத்த 24 மணிநேரத்துக்கு புதுச்சேரி மற்றும் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, தேனி, நீலகிரி, நெல்லை, சேலம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

மேலும் தமிழகத்தில் பல பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை பெய்யவாய்ப்பு உண்டு.

நேற்று ஒரே நாளில் புதுவை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக 19 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

கோத்தகிரி-9 செ.மீ., குன்னூர்- 7 செ.மீ., சோத்துப்பாறை-6 செ.மீ., தண்டராம்பேட்டை -4செ.மீ. மழை பெய்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான தூறல் மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடலூரில் பிப்ரவரி மாதத்தில் வரலாறு காணாத வகையில் இவ்வாறு மழை பெய்வது 90 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்வதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே 1930-ம் ஆண்டு இதே போல் பிப்ரவரி மாதத்தில் மிக கனமழை பெய்து உள்ளது.
Tags:    

Similar News