செய்திகள்
கமல்ஹாசன்

மதுக்கடைகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க வேண்டும்- கமல்ஹாசன் கோரிக்கை

Published On 2021-02-19 04:31 GMT   |   Update On 2021-02-19 04:31 GMT
மதுக்கடைகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மது போதையினால் குற்றங்கள் பெருகுவதும், குடும்பங்கள் சீரழிவதும் தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன. குடும்ப வன்முறை தொடங்கி காவல் அதிகாரிகளைத் தாக்குவது வரை சென்றுவிட்டது. மதுக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் என்கிற வாக்குறுதிகள், கொடுத்தவருடனேயே மறைந்துவிட்டன.

எனவே மாநில அரசு மதுக்கடைகள் விஷயத்தில் உறுதியான நடவடிக்கையில் இறங்கியாக வேண்டும். இப்போதிருக்கும் மதுக்கடைகளின் எண்ணிக்கை உடனடியாக பாதியாகக் குறைக்கப்பட வேண்டும். மீதமுள்ள கடைகளைக் கூட படிப்படியாக தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும். மது விற்பனை தனியார் வசம் இருந்தபோது இத்தனை கடைகள் இல்லை. மதுப்பழக்கம் இப்படி கட்டற்று பரவவில்லை.

தனியார் கடைகளுக்கும் மிக மிக மட்டுறுத்தப்பட்ட வினியோகங்கள், கடுமையான கண்காணிப்புகள், நேரக்கட்டுப்பாடு ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எங்கெல்லாம் மதுக்கடைகள் இருந்ததோ, இருக்கிறதோ அங்கெல்லாம் தரமான இலவச மதுப்பழக்கத்தினர் மறுவாழ்வு மற்றும் வழிகாட்டி மையங்கள் அரசால் தொடங்கப்பட வேண்டும். முழு மதுவிலக்கை அமல்படுத்தும் நிலை நோக்கி முதல் அடி எடுத்துவைக்க வேண்டும்.

மக்கள் நலனுக்காக இதைச் செய்ய வேண்டிய அரசு அக்கறை இல்லாமல் இருக்கிறது. தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் மிக கடுமையாகப் பாதிக்கப்படும் பெண்களை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பதற்காகவாவது தமிழக அரசு உடனடியாக மதுக் கொடுமை விஷயத்தில் பார்வையைச் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News