செய்திகள்
விபத்து

ஆறில் ஒரு விபத்துக்கு லைசென்சு இல்லாத டிரைவர்களே காரணம்- புள்ளிவிவரங்கள் தகவல்

Published On 2021-02-19 04:13 GMT   |   Update On 2021-02-19 04:13 GMT
தமிழகத்தில் நடக்கும் ஆறில் ஒரு விபத்துக்கு லைசென்சு இல்லாத டிரைவர்களே காரணம் என புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
சென்னை:

2017-2018 மற்றும் 2018-2019 ஆகிய ஆண்டுகளில் சாலை பாதுகாப்பில் மிகச்சிறந்து விளங்கிய மாநிலம் என்ற விருதை மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு பெற்றுள்ளது.

சாலை பாதுகாப்புக்காக தமிழக அரசு விருதுகளை பெற்ற போதிலும், 2019-ம் ஆண்டு தமிழகத்தில் 58 ஆயிரத்து 228 வாகன விபத்துகள் நடந்துள்ளன.

இதில், 9,479 விபத்துகள் உரிய லைசென்சு பெறாத டிரைவர்களாலும், 1,252 விபத்துகள் பழகுனர் உரிமம் பெற்றவர்களாலும், 3,670 விபத்துகள் லைசென்சு பெற்றவர்களால் நடந்ததா அல்லது லைசென்சு இல்லாதவர்களால் நடந்ததா என்பது கண்டறியப்படாமலும் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த புள்ளிவிவரத்தை வைத்து பார்க்கும் போது ஆறில் ஒரு விபத்துக்கு லைசென்சு இல்லாத டிரைவர்களே காரணம் என்பது உறுதியாகிறது.

2019-2020-ம் ஆண்டு மட்டும் லைசென்சு வாகனம் ஓட்டியதாக 41 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசாரின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில், சென்னையில் மட்டும் 6,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

லைசென்சு இல்லாதவர்களால் வாகனங்கள் இயக்கப்பட்டு, அவை விபத்தில் சிக்குவதை பார்க்கும்போது வாகன சோதனை முறையாக நடைபெறுகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

அதேவேளையில் லைசென்சு பெற்று வாகனங்களை இயக்கியவர்கள் மூலம் 43 ஆயிரத்து 827 விபத்துகள் நடந்திருப்பதை பார்க்கும்போது லைசென்சு வழங்கும் நடைமுறை சரியில்லையா? என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த கேள்விக்கு சமீபத்தில் சென்னையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.

அதாவது,‘இந்தியாவில் மிக சுலபமாக ஓட்டுனர் லைசென்சு பெற முடிகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஓட்டுனர் லைசென்சு பெறுவது மிக கடினம். இது நாட்டுக்கு நல்லதல்ல' என்பதே அவரது பதிலாகும்.

விபத்துகளை குறைக்க ஓட்டுனர் உரிமம் பெறுவற்கான நடைமுறை கடுமையாக்கப்பட வேண்டும் என்ற மத்திய மந்திரியின் நியாயமான பேச்சை பல்வேறு தரப்பினரும் வரவேற்று உள்ளனர்.

இடைத்தரகர்கள் மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளின் உரிமையாளர்கள் மூலம் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஓட்டுனர் உரிமம் வழங்கும் நடைமுறை முழுமையாக தடுக்கப்பட வேண்டும் என்ற பொதுவான கருத்தும் இருந்து வருகிறது.

கணினி மூலம் வாகன ஓட்டிகளை கண்காணித்து லைசென்சு உரிமம் வழங்கும் புதிய நடைமுறையை மேற்கொள்ள அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், தமிழகத்தில் 14 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கணினி மூலம் வாகன ஓட்டிகளை கண்காணித்து லைசென்சு உரிமம் வழங்கும் நடைமுறைக்கான பணிகள் முடிவடைந்து உள்ளதாகவும் வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News