செய்திகள்
மாநிலத் தலைவர் எல்.முருகன்

அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் - பா.ஜ.க தலைவர் எல்.முருகன்

Published On 2021-02-18 22:11 GMT   |   Update On 2021-02-18 22:11 GMT
அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்று பா.ஜ.க மாநிலத்தலைவர் எல்.முருகன் கூறினார்.
சென்னை:

தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான கிஷன்ரெட்டி மற்றும் தமிழக பா.ஜ.க. தேர்தல் இணை பொறுப்பாளரும், மத்திய மந்திரி வி.கே. சிங் ஆகியோர் நேற்று தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வந்தனர். அவர்களை மாநிலத்தலைவர் எல்.முருகன் வரவேற்றார்.

அதனைத்தொடர்ந்து அவர்கள் சென்னை கோட்டத்தை சார்ந்த சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், மாவட்ட தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அதன்பின், மாநிலத் தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் எப்படி செயல்பட வேண்டும், தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும், எந்தெந்த இடங்களில் எப்படி பணி செய்ய வேண்டும் என ஆலோசித்தோம். அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும். அதன்பிறகு தான் பா.ஜ.க. எத்தனை தொகுதியில் போட்டியிடும் என்பது முடிவாகும்.

புதுச்சேரியில் நடக்கும் குழப்பத்திற்கு அந்த மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி தான் காரணம். அதற்கும் பா.ஜ.க.விற்கும், எந்த சம்பந்தமும் இல்லை. சசிகலா- அ.தி.மு.க. இடையேயான விவகாரம் அவர்களது உள்கட்சி பிரச்சினை. அ.ம.மு.க. தனித்துப் போட்டியிடுவோம் என எங்கும் குறிப்பிடவில்லை. பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க. இடம் பெறுவது குறித்து பா.ஜ.க. தலைமை முடிவு செய்யும். கொரோனாவால் உலகம் முழுவதும் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.
Tags:    

Similar News