செய்திகள்
சசிகலா

சசிகலா தொடர்ந்த வழக்கு சிவில் கோர்ட்டில் மார்ச் 15ந் தேதி விசாரணை

Published On 2021-02-18 02:28 GMT   |   Update On 2021-02-18 02:28 GMT
அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து இயற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வருகிற மார்ச் 15-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.
சென்னை:

அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந் தேதி நடந்தது. அப்போது, கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து தீர்மானம் இயற்றினர். அதற்குப் பதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகளை உருவாக்கியும், அந்தப் பதவிகளுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நியமித்து மற்றொரு தீர்மானமும் இயற்றப்பட்டது. இந்த தீர்மானங்களை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சசிகலா சிவில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், இந்த தீர்மானங்கள் சட்டவிரோதமானவை. அவற்றை ரத்து செய்ய வேண்டும். மேலும், அ.தி.மு.க., தொண்டர்களின் பெயர் விவரம் கொண்ட ஆவணங்கள் எதையும் திருத்தாமல் பாதுகாக்கவும், அ.தி.மு.க., பெயரில் உள்ள வங்கி கணக்குகளின் அறிக்கையை வழங்கவும் அ.தி.மு.க. கட்சி அலுவலக மேலாளர் மகாலிங்கத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஐகோர்ட்டு விசாரித்தது. பின்னர், ரூ.1 கோடி மதிப்புக்கு கீழ் உள்ள வழக்கு என்பதால், இந்த வழக்கை சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு விசாரணைக்கு ஐகோர்ட்டு பதிவுத்துறை பரிந்துரை செய்தது. சசிகலா சிறையில் இருந்ததால், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க கோரி சிவில் கோர்ட்டை அணுகவில்லை. சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலையான சசிகலா, அ.தி.மு.க. கொடியை காரில் பயன்படுத்தியதால் பெரும் பரபரப்பும், சர்ச்சையும் ஏற்பட்டன. இதுகுறித்து போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

அதனால், சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு பதிவாளருக்கு சசிகலா சார்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், ‘ஐகோர்ட்டு பரிந்துரைத்த சிவில் வழக்கிற்கு எண் வழங்கி, அந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாததால், அரசியல் ரீதியான உரிமைகள் பாதிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டு இருந்தது.

அந்தக் கடிதத்தைப் பரிசீலித்த பதிவாளர், ‘சசிகலா தொடர்ந்த வழக்கை 4-வது சிட்டி சிவில் கோர்ட்டு விசாரிக்கும். அந்த வழக்கு வருகிற மார்ச் 15-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியனிடம் கேட்டபோது, ‘சசிகலா தொடர்ந்த வழக்கு வருகிற மார்ச் 15-ந் தேதி சிவில் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. கட்சி தொடர்பான இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், சசிகலா பயணிக்கும் காரில் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த எந்த தடையும் இல்லை. அவர் கொடியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விவகாரத்தில் போலீசார் தலையிட முடியாது, தடுக்கவும் முடியாது’ என்று கூறினார்.
Tags:    

Similar News