செய்திகள்
விஜயகாந்த்

தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.25 முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம்- விஜயகாந்த்

Published On 2021-02-18 02:19 GMT   |   Update On 2021-02-18 05:32 GMT
சட்டசபை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.25 முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளில் தே.மு.தி.க.வின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் சட்டமன்ற தேர்தல் விருப்பமனுக்களை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் (மார்ச்) 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை காலை 10 மணியிலிருந்து மாலை 5 வரை விருப்பமனுக்களை பெற்றுக்கொண்டு பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தே.மு.தி.க.வின் நிர்வாகிகளாகவும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.15 ஆயிரமும், தமிழ்நாடு சட்டமன்ற தனி தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூ. 10 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற தனி தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூ.5 ஆயிரம் செலுத்தி விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

தே.மு.தி.க.வின் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், தேர்தல் பணி குழு செயலாளர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்டம், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்டம், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும் மற்றும் கழகத் தொண்டர்களும் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாம் மாபெரும் வெற்றியடைய பாடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News