செய்திகள்
மதுபானக்கடையில் கொள்ளையில் ஈடுபட்டவர்களையும், அவர்களை பிடித்த போலீஸ் தனிப்படையினரையும் படத்தில் காணலாம்.

திருப்பாச்சேத்தி அருகே மதுக்கடையில் கொள்ளையடித்த 9 பேர் கைது

Published On 2021-02-17 11:49 GMT   |   Update On 2021-02-17 11:49 GMT
திருப்பாச்சேத்தி அருகே மதுபானக் கடையில் கொள்ளையில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்புவனம்:

திருப்பாச்சேத்தி பக்கம் உள்ளது பிச்சைபிள்ளையேந்தல் கிராமம். இங்கு அரசு மதுபானக்கடை உள்ளது. இந்த மதுபான கடையில் கடந்த மாதம் 29-ந்் தேதி இரவு பூட்டை உடைத்து ரூ.94 ஆயிரம் மதிப்புள்ள 487 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இந்தசம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.இந்த திருட்டை கண்டு பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் உத்தரவின்பேரில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் எர்சாத், சபரிதாசன், கோடீஸ்வரன் ஆகியோர் மேற்பார்வையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மற்றும் முதல் நிலை காவலர்கள் சரவணன், முத்துப்பாண்டி, காளீஸ்வரன் உள்பட போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு கொள்ளையர்களை தேடிவந்தனர்.

இந்தநிலையில் ரகசிய தகவலின்படி கலியாந்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்ற ராஜதுரை (வயது27), வேலு (32), திருப்புவனம் பழையூரைச் சேர்ந்த வன்னிமுத்து (27), டி.பாப்பான்குளத்தைச் சேர்ந்த ராஜா என்ற வீரபத்திரன் (31), முத்துகிருஷ்ணன் (38), பிரகாஷ் (18), பாண்டி (20), பிரபுதேவா (26), மேலூர் தாலுகா மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்தசாமி (26) ஆகிய 9 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். இதில் அவர்கள் மதுக்கடையில் திருடியது தெரிய வந்துள்ளது.

இவர்களிடம் மேலும் தொடர்ந்து விசாரணை செய்ததில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் மோட்டார் சைக்கிள்கள் திருடியதும் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் இருந்து 16 திருட்டு மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த மோட்டார் சைக்கிள்கள் திருட்டு வழக்கை கண்டுபிடிக்க சைபர் கிரைம் சப்-இன்ஸ் பெக்டர் சுரேந்தர் மற்றும் போலீஸ்காரர்களும் திருப்பாச்சேத்தி காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் அசோக்குமார் ஆகியோரும் விசாரணையில் ஈடுபட்டு இருந்தனர்.

Tags:    

Similar News