செய்திகள்
கனிமொழி

ஸ்டாலினை முதல்வராக்க மக்கள் முடிவு செய்து விட்டனர்- கனிமொழி

Published On 2021-02-16 06:26 GMT   |   Update On 2021-02-16 06:26 GMT
ஸ்டாலினை முதல்வராக்க மக்கள் முடிவு செய்து விட்டனர் என்று திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி கூறியுள்ளார்.

தருமபுரி:

தருமபுரியில் தி.மு.க. சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ நிகழ்ச்சி நடந்தது. தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இதில் மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது.-

விவசாயிகள் எதிர்க்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை தமிழக வேளாண் துறை அமைச்சர் அன்பழகன், நானும் விவசாயி தான் என கூறிக்கொள்ளும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஆதரிக்கின்றனர்.

பயிர் கடன் உள்ளிட்டவை ஸ்டாலின் சொல்வதை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். எனவே ஸ்டாலின் சொல்வதை ஸ்டாலினே செய்யட்டும் என அவரை தமிழக முதல்வராக்க மக்கள் முடிவு செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தருமபுரி தி.மு.க. அலுவலகத்தில் நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக புதிய தொழில்கள் தொடங்கப்பட வில்லை. புதிதாக தொழில் முதலீடுகள் எதுவும் தமிழகத்துக்கு வரவில்லை. இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். இந்த கொரோனா கால கட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் மக்களை சந்திக்கவில்லை.

தற்போது பலம் பொருந்திய பா.ஜனதா அரசின் அதிகாரத்தை அ.தி.மு.க. பின்னணியில் நிறுத்தி இந்த தேர்தலை சந்திக்கிறது. நம் சுயமரியாதை உணர்வுகள், திராவிட கொள்கைகள், சமூக நீதியை ஒழித்து கட்ட வேண்டும் என நினைப்பவர்களை நாம் எதிர்கொள்கிறோம். இத்தனை ஆண்டு காலமாக கருணாநிதி, அண்ணாதுரை, பெரியார் ஆகியோர் வாழ்நாள் முழுவதும் எதற்காக பாடுபட்டார்களோ, அதை காப்பாற்றும் தேர்தல் இது என்பதை புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.

அ.தி.மு.க.வில் யாரை சேர்க்க வேண்டும் என்று கூட மோடி, அமித்ஷாவை பார்த்து விட்டு தான் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கிறார். ஸ்டாலின் கூறியது போல், 200 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அதியமான் கோட்டை அருகே எர்ரப்ப்டி கிராமத்தில் மாற்றுத் திறனாளிகளை சந்தித்த கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித் துறையை உருவாக்கிய முதல்- அமைசர் கருணாநிதி, அத்துறையை தன் பொறுப்பில் வைத்துக் கொண்டார். மாற்றுத் திறனாளிகளுக்கு நலவாரியம் அமைக்கப்பட்டது.

ஆனால் தற்போது மாற்றுத் திறனாளிகள் போராடினால் கைது செய்யப்படுகிறார்கள். இந்த தேர்தலுக்கு பிறகு தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News