செய்திகள்
மோசடி

கே.கே.நகரில் வங்கி ஊழியர் போல் நடித்து பெண்ணிடம் ரூ.3.70 லட்சம் மோசடி

Published On 2021-02-13 08:09 GMT   |   Update On 2021-02-13 08:09 GMT
கே.கே.நகரில் வங்கி ஊழியர் போல் நடித்து பெண்ணிடம் ரூ.3.70 லட்சம் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

சென்னை எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவரது மனைவி விஜயலட்சுமி (36). கே.கே.நகர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு அசோக் நகரை சேர்ந்த அருண் (36) என்பவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகமானார். பிரபல தனியார் வங்கியின் அசோக் நகர் கிளையில் வேலை பார்த்து வருவதாக கூறிய அருணிடம் தனது கணவர் நடத்தி வரும் தொழிலை விரிவு படுத்த வங்கியில் ரூ.25 லட்சம் கடன் பெற்று தருமாறு விஜயலட்சுமி கேட்டார்.

20 நாட்களில் கடன் வாங்கி தருவதாக கூறிய அருண் அதற்கு தேவைப்படும் ஆவணங்களையும் விஜய லட்சுமியிடம் இருந்து வாங்கி சென்றார். பின்னர் ஒரு வாரம் கழித்து வந்த அருண் வங்கியில் இருந்து ஒப்புதல் கிடைத்து விட்டது. 2 நாட்களில் ரூ.25 லட்சம் பணம் கிடைத்துவிடும் என்று கூறினார்.

அப்போது தனது வங்கி கணக்கில் உடனடியாக ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் பணம் கட்ட வேண்டும் அதற்கு பணம் கொடுத்து உதவ வேண்டும் என்றும் 2 நாட்களில் எனக்கு மிகபெரிய தொகை ஒன்று வரவுள்ளது. உடனடியாக தங்களது கடன் தொகையை திருப்பி கொடுத்து விடுகிறேன் என்றும் கூறினார்.

இதை உண்மை என்று நம்பிய விஜயலட்சுமி தனது நகைகளை அடமானம் வைத்து ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை அருணிடம் கொடுத்தார். பணத்தை வாங்கி சென்ற அருண் இதுநாள் வரை விஜயலட்சுமிக்கு வங்கியில் இருந்து கடன் ஏதும் பெற்று தரவில்லை. கடனாக வாங்கிய ரூ.3.70 லட்சம் பணத்தையும் திருப்பி தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தார்.

சந்தேகமடைந்த விஜய லட்சுமி வங்கி கிளைக்கு சென்று விசாரித்ததில் அருண் வங்கியில் வேலை பார்ப்பதாக கூறி பல பேரிடம் ஏமாற்றி நூதன முறையில் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து பண மோசடியில் ஈடுபட்ட அருண் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தருமாறு எம்.ஜி.ஆர். நகர் குற்றப்பிரிவு போலீசில் விஜயலட்சுமி புகார் செய்தார். விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News