செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் 23 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டனர்

Published On 2021-02-12 03:01 GMT   |   Update On 2021-02-12 03:01 GMT
தமிழகத்தில் 23 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி மருந்து போட்டுக் கொண்டுள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் நேற்றைய (வியாழக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 55 ஆயிரத்து 592 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 288 ஆண்கள், 193 பெண்கள் என மொத்தம் 481 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 146 பேரும், கோவையில் 47 பேரும், செங்கல்பட்டில் 33 பேரும், குறைந்தபட்சமாக கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், நெல்லையில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூரில் புதிதாக பாதிப்பு இல்லை. இந்த பட்டியலில், 12 வயதுக்குட்பட்ட 27 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 105 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 62 லட்சத்து 86 ஆயிரத்து 634 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 43 ஆயிரத்து 690 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு, தனியார் மருத்துவமனையில் தலா 3 பேர் என 6 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் சென்னையில் இருவரும், கோவை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூரில் தலா ஒருவரும் என 5 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

இதுவரையில் தமிழகத்தில் 12,402 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 490 பேர் புதிதாக நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழகத்தில் 4 ஆயிரத்து 294 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று 62 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட மருந்து தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று 14 ஆயிரத்து 370 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும் கடந்த 25 நாட்களில், 9 லட்சத்து 12 ஆயிரத்து 650 பேருக்கு போட தடுப்பூசி மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் 2 லட்சத்து 11 ஆயிரத்து 484 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடக்கொண்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 936 மருத்துவ பணியாளர்கள், 16 ஆயிரத்து 268 முன்களப் பணியாளர்கள்,7 ஆயிரத்து 280 போலீசார் அடங்குவர். தமிழகத்தில் 23.17 சதவீதம் பயனாளிகள் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News