செய்திகள்
நெல்லை அரசு ஆஸ்பத்திரி டீனிடம், பெர்சிஸ் மனு கொடுக்க வந்தபோது எடுத்த படம்.

ஜெயராஜ்-பென்னிக்ஸ் பிரேத பரிசோதனை அறிக்கையை உடனே வழங்க வேண்டும்: மகள் பெர்சிஸ் மனு

Published On 2021-02-11 10:33 GMT   |   Update On 2021-02-11 10:33 GMT
ஜெயராஜின் மகள் பெர்சிஸ் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரவிச்சந்திரனிடம் தனது தந்தை, சகோதரரின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குமாறு மனு கொடுத்தார்.
நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர்.

அவர்களது உடல் பிரேத பரிசோதனை நெல்லை அரசு மருத்துவமனையில் நடைபெற்று பின்னர் அவர்களது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜூன் 24-ந் தேதி நடைபெற்ற தந்தை-மகனின் பிரேத பரிசோதனை அறிக்கை சீலிட்ட உறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால் இந்த அறிக்கை அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஜெயராஜின் மகள் பெர்சிஸ் நேற்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரவிச்சந்திரனிடம் தனது தந்தை மற்றும் சகோதரரின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குமாறு மனு கொடுத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது தந்தை மற்றும் சகோதரர் உடல் பிரேத பரிசோதனை முடிந்து 8 மாதங்கள் கடந்தும், அந்த அறிக்கை எங்களுக்கு வழங்கப்படவில்லை. வழக்கு விசாரணை மதுரை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்ட விசாரணை வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது.

வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு பிரேத பரிசோதனை அறிக்கை தேவைப்படுகிறது. மேலும் தபால் நிலையம், இன்சூரன்ஸ் பணபலன்களை பெறுவதற்கும் அறிக்கை தேவைப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து கேட்டால் முறையான பதில் தர மறுக்கிறார்கள். அதற்கான மனுவையே வாங்க மறுக்கிறார்கள்.

எனவே தற்போது டீனிடம் மனு அளித்து உள்ளோம். இப்போதும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றார்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி டீன் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினர் என்னிடம் தற்போதுதான் பிரேத பரிசோதனை அறிக்கை கேட்டு மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி உள்ளோம். விரைவில் அவர்களுக்கு அறிக்கை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



Tags:    

Similar News