செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அச்சுறுத்தல்,மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சமாட்டேன்: எதையும் சந்திக்கத் தயார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published On 2021-02-10 15:25 GMT   |   Update On 2021-02-10 15:25 GMT
அதிமுக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை எனவும் பேச்சு வார்த்தைக்கு பின் தொகுதி பங்கீடு பற்றி அறிவிப்பு வெளியிடப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம்:

சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் 11 சட்டப்பேரவை தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்திற்கு இன்று மாலை வருகை தந்தார். அவருக்கு ஓமலூர் எம்எல்ஏ வெற்றிவேல், மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பூங்கொத்து அளித்து வரவேற்பளித்தனர்.

இதனைத்தொடர்ந்து புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சேலம் மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், அதிமுக இளம் பெண்கள் இளைஞர் பாசறை செயலாளர்கள் , தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். அவர்களுடன் சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

சட்டமன்ற தேர்தலில் பூத் வாரியாக நிர்வாகிகள் செயல்பட வேண்டிய விதம் மற்றும் பிரசாரம் குறித்து அதிமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மாநில திட்டக்குழு துணைத்தலைவர் பொன்னையன், மேட்டூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் செம்மலை உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார். அப்போது அதிமுக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை; பேச்சு வார்த்தைக்கு பின் தொகுதி பங்கீடு பற்றி அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:-

எள்முனை அளவுக்கு கூட அதிமுகவில் பிளவு இல்லை. ஒற்றுமையாகவே உள்ளோம். கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்கள் நீக்கம் செய்யப்படுவது எல்லா கட்சியிலும் உள்ள நடைமுறைதான். 

அ.ம.மு.க. கட்சியில் இருந்து விலகி யாராவது இணைய முன்வந்தால் அதிமுக தலைமை முடிவு எடுக்கும்.கட்சியில் இல்லாதவர்களை பற்றி நாங்கள் ஏன் பேச வேண்டும். அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை ; நான் எதையும் சந்திக்க தயார்

நான் செல்லும் இடங்களில் மக்கள் எழுச்சியுடன் கூடுகின்றனர்; மீண்டும் அதிமுக வெற்றி பெற்றி ஆட்சி அமைக்கும். அரசு ஊழியர்களுக்கு அதிகமான சலுகை அதிமுக ஆட்சியில் தான் கிடைத்துள்ளது. ஜனநாயக நாட்டில் யாரும்  அடக்குமுறையில் ஈடுபடவில்லை

ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் நடைமுறையில் உள்ளன. சிறப்பு நீதிமன்றங்களில் திமுக  முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது மு.க.ஸ்டாலினுக்கு தெரியாதா?  

மத்தியில் கூட்டணியில் இருந்த போது, திமுக எந்த நன்மையும் செய்யவில்லை என கூறினார்.
Tags:    

Similar News