செய்திகள்
வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் சிறுமி ஒருவர் உதயநிதி ஸ்டாலினுக்கு பூச்செடி வழங்கிய காட்சி.

சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Published On 2021-02-09 11:11 GMT   |   Update On 2021-02-09 11:11 GMT
கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட இடங்களை விட வருகிற தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. போட்டியிடும் என இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
கரூர்:

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கரூருக்கு வருகை தந்து நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து 2-வது நாளான நேற்று காலை கரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கரூர் மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தற்போது மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எனவே தி.மு.க. ஆட்சியில் அமரப்போவது உறுதி. அ.தி.மு.க. ஆட்சி மீதும், அதை ஆட்டிவைக்கும் பா.ஜ.க. மீதும் மக்கள் கோபமாக உள்ளனர். மோடி நம்மீது கோபமாக இருக்கிறார். கடந்த பொங்கலுக்கோ, தீபாவளிக்கோ, கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்த காலத்திலோ ரூ.2 ஆயிரத்து 500 கொடுக்காத தமிழக அரசு, தற்போது தேர்தலை கருத்தில் கொண்டே பொங்கலுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வழங்கி உள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளின் வெற்றியும் உங்கள் கையில்தான் உள்ளது. அந்த வெற்றியை நீங்கள் உறுதியாக பெற்றுத்தர வேண்டும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டு கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 தொகுதிகளையும் தி.மு.க.விற்கே பெற்றுத்தர முயற்சி எடுப்பேன்.

ஏற்கனவே 10 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. போட்டியிட்ட தொகுதிகளை விட, இந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அதிக தொகுதிகளில் போட்டியிடும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு காரணம் இயற்கையாக அமைந்த இந்த கூட்டணிதான். எனவே இந்தமுறையும் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய வெற்றி கூட்டணியை அமைத்து, வெற்றி வேட்பாளர்களை மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். எனவே வெற்றியை தேடி தரவேண்டியது வாக்கு முகவர்களாகிய உங்கள் கடமை.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News