செய்திகள்
உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் நின்றபடி பேசியபோது எடுத்த படம்.

அ.தி.மு.க.வுக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Published On 2021-02-06 23:27 GMT   |   Update On 2021-02-06 23:27 GMT
அ.தி.மு.க.வுக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது என்று ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
திருக்கோவிலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜி.அரியூர் கிராமத்தில் திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்கிற தலைப்பில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ரிஷிவந்தியம் தொகுதியில் 24 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வசந்தம் கார்த்திகேயனை வெற்றி பெற செய்த நீங்கள் இந்த முறை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், அவரை வெற்றிபெற செய்ய வேண்டும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் நெருங்குவதையொட்டி பொங்கல் பண்டிகைக்கு ரூ.2,500 தந்தார். மக்கள் மீது இவர் உண்மையான அன்பு வைத்திருந்தால் ஒவ்வொரு பொங்கலுக்கும் ரூ.2,500 கொடுத்து இருக்கலாம். இதை மக்களாகிய நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக்கடன், கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என தி.மு.க. தலைவர் அறிவித்திருக்கிறார். அதன் காரணத்தினாலேயே தற்போது முதல்-அமைச்சர் பயிர் கடனை தள்ளுபடி செய்து அறிவித்திருக்கிறார். இதன் மூலம் அ.தி.மு.க.வுக்கு தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என பயம் வந்து விட்டது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

தியாகதுருகம் அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் இப்பகுதி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த உடன் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம், அரசு கலைக்கல்லூரி, தீயணைப்பு நிலையம், கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். 234 தொகுதிகளிலும் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக அரியணை ஏற அயராது பாடுபட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
Tags:    

Similar News