செய்திகள்
ஆன்லைன் மோசடி

ராமநாதபுரத்தில் டாக்டரிடம் ரூ.1¼ லட்சம் ஆன்லைன் மோசடி

Published On 2021-02-06 07:11 GMT   |   Update On 2021-02-06 07:11 GMT
ராமநாதபுரத்தில் டாக்டரிடம் ரூ.1¼ லட்சம் ஆன்லைன் மோசடி நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்:

நாடுமுழுவதும் ஆன்லைன் மூலம் பண மோசடியில் பல கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்தக் கும்பலிடம் பணத்தை இழந்து பலரும் தவித்து வருகின்றனர்.

படிக்காத பாமரமக்கள் மட்டுமின்றி படித்த பலரும் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்து நிற்பது தான் வேதனையான விசயம்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவரும் ஆன்லைன் மோசடியில் சிக்கி ரூ.1¼ லட்சத்தை இழந்துள்ளார். அவரது பெயர் டாக்டர் ஸ்டீபனா ஜொனாத்தான்.

இவர் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த மாதம் 27-ந் தேதி தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் பெயரில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், தங்களுக்கு பம்பர் பரிசாக ரூ.11 லட்சம் விழுந்துள்ளது. இதனை பெற ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரியினங்களுக்காக ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 300 செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனை நம்பி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த வங்கி எண்ணில் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 300 செலுத்தினேன். ஆனால் அதன் பிறகு யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.

கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை அழைத்த போது எந்தவித பதிலும் இல்லை. இதனால் நான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்தேன்.

இது குறித்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News