செய்திகள்
கவர்னர் பன்வாரிலால் புரோகித்

பெரியாறு, காவிரியில் புதிய அணைகள் கட்டுவதை தடுக்க நடவடிக்கை- கவர்னர் உரை

Published On 2021-02-02 10:14 GMT   |   Update On 2021-02-02 10:14 GMT
காவிரி-குண்டாறு திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி தெற்கு வெள்ளாறு இணைப்பின் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
சென்னை:

2021-ம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது. கவர்னர் உரையில் கூறியதாவது:

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை, இந்த அரசு தொடர்ந்து தீவிரமாக பாதுகாக்கும்.

காவிரி மற்றும் அதன் கிளை நதிகளின் குறுக்கே யாதொரு நீர்த்தேக்கத்தையோ அல்லது திசை திருப்பும் அமைப்புகளையோ கர்நாடக அரசு கட்டுவதை அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசிடம் நாங்கள் மீண்டும் வலியுறுத்தி உள்ளோம்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மீறி கர்நாடக அரசால் முன்மொழியப்பட்ட மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று மத்திய அரசை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மீறி, பெரியாறு ஆற்றின் குறுக்கே எந்தவொரு புதிய அணையையும் கட்டுவதற்கு கேரள மாநிலத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என்று நாங்கள் மத்திய அரசை வலியுறுத்துகிறோம். முல்லைப் பெரியாறு அணையினை வலுப்படுத்தும் எஞ்சியுள்ள பணிகளை மேற்கொள்ள தேவையான அனுமதிகளை விரைந்து வழங்குமாறு மத்திய அரசையும், கேரள அரசையும் இந்த அரசு கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாட்டின் அருகில் உள்ள நீர் வளங்களைப் பாதுகாப்பதிலும், திறம்படப் பயன்படுத்துவதிலும் இந்த அரசு உரிய கவனம் செலுத்துகின்றது.

காவிரி-குண்டாறு திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி தெற்கு வெள்ளாறு இணைப்பின் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அத்திக்கடவு-அவிநாசி நீரேற்று பாசனத் திட்டத்திற்கு ரூ.1,652 கோடியை அரசு ஒப்பளிப்பு செய்துள்ளது. இப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

மேட்டூர் அணையின் உபரிநீரைக் கொண்டு 100 வறண்ட ஏரிகளை நிரப்புவதற்காக, சரபங்கா நீரேற்றுப் பாசனத் திட்டப்பணிகள் ரூ.565 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு 2021-ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் இப்பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் இழப்பிற்காக, ரூ.9,312 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே நுண்ணீர் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. நீர்ப் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக, 2019-20-ம் ஆண்டில் ரூ.1,112 கோடி மானியத்துடன் 6.52 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News